வருகிற 13-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடாத தொழிலாளர்களை அனுமதிக்கக்கூடாது தொழிற்சாலைக்கு இணை இயக்குனர் உத்தரவு
வருகிற 13-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடாத தொழிலாளர்களை அனுமதிக்கக்கூடாது என்று தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வேல்முருகன் உத்தரவிட்டு உள்ளார்.
வருகிற 13-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடாத தொழிலாளர்களை அனுமதிக்கக்கூடாது என்று தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வேல்முருகன் உத்தரவிட்டு உள்ளார்.
சிறப்பு முகாம்
ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் ஏ.வேல்முருகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிக பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் 846 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.
கடும் நடவடிக்கை
இந்த முகாமில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் செலுத்தப்படுகிறது. ஈரோடு மாவட்ட எல்லைக்கு உள்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் முகாமுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்போது ஆதார் அடையாள அட்டை கொண்டு சென்று செல்போன் எண்ணை தெரிவிக்க வேண்டும். இதேபோல் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தங்களது தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறப்பு தடுப்பூசி முகாம் குறித்து அறிவுறுத்தி அனைத்து தொழிலாளர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வருகிற 13-ந் தேதி முதல் தொழிற்சாலையில் தடுப்பூசி போடாத தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆய்வின்போது தடுப்பூசி போடாத தொழிலாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் ஏ.வேல்முருகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story