கோபி அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
கோபி அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.
டி.என்.பாளையம்
கோபி அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.
கூலித்தொழிலாளி
விழுப்புரம் மாவட்டம் அரச்சலாபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 26) கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று ரஞ்சித்குமாரின் நண்பரான திருப்பூர் மாவட்டம் கருக்குபாளையத்தை சேர்ந்த அர்ஜுனன் என்பவருடன் மோட்டார்சைக்கிளில் கோபி அருகே உள்ள குருவிகல்பாறை பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு 2 பேரும் குளிக்க சென்றனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அர்ஜுனன் குளித்து விட்டு கரைக்கு வந்துவிட்டார்.
மூழ்கினார்
ஆனால் ரஞ்சித்குமார் மட்டும் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் ஆற்றின் ஆழமான இடத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர் ஆற்றில் மூழ்கினார். வெகுநேரமாகியும் கரைக்கு ரஞ்சித்குமார் வராததால் ஆற்றை அர்ஜுனன் பார்த்தார்.
அப்போது அங்கு ரஞ்சித்குமார் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆற்றில் இறங்கி ரஞ்சித்குமாரை தேடி பார்த்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே இருட்டி விட்டதால் ரஞ்சித்குமாரை தேடுவதை அவர்கள் நிறுத்தினர்.
உடல் மீட்பு
இதுபற்றி அறிந்ததும், நேற்று முன்தினம் கோபி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ரஞ்சித்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரஞ்சித்குமாரின் உடல் அந்த பகுதியில் மிதந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன ரஞ்சித்குமாருக்கு சங்கீதா என்ற மனைவியும், மகாலட்சுமி, ஜீவிதா என 2 மகள்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story