ஈரோட்டில் பயங்கரம் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெயிண்டர் கொலை; அண்ணியுடன் கள்ளக்காதலன் கைது


ஈரோட்டில் பயங்கரம் கயிற்றால் கழுத்தை இறுக்கி  பெயிண்டர் கொலை; அண்ணியுடன் கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 10 Sep 2021 9:18 PM GMT (Updated: 2021-09-11T02:48:01+05:30)

ஈரோட்டில் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெயிண்டர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணியுடன் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு
ஈரோட்டில் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெயிண்டர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணியுடன் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்காதல்
ஈரோடு வி.வி.சி.ஆர். நகர், வளையக்கார வீதி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் மதன் (வயது 29). இவருக்கு திருமணமாகவில்லை. மதன் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது பெரியம்மா மகன் மகேஸ்வரன். இவருடைய மனைவி மஞ்சு (25). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 
மகேஸ்வரன் தனது குடும்பத்துடன் ஈரோடு சாஸ்திரி நகரில் வசித்து வந்தார். உறவினர் என்பதால் மதன், மஞ்சு வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களுடைய கள்ளக்காதல் விவகாரம் மஞ்சுவின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் மகேஸ்வரன் தனது மனைவி மஞ்சுவை கண்டித்துள்ளார்.
கணவரை பிரிந்தார்
அதனால் கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கணவர் மகேஸ்வரனை விட்டு பிரிந்து தனது 6 வயது மகளுடன் ஈரோடு ரங்கம்பாளையம், இரணியன் வீதியில் கடந்த 2 மாதங்களாக கொழுந்தனார் மதனுடன் மஞ்சு குடும்பம் நடத்தி வந்தார்.
மதன் தினமும் குடிபோதையில் வந்து மஞ்சுவை அடிப்பதோடு, பாலியல் தொல்லையும் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் மதனுக்கும், மஞ்சுவிற்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கழுத்தை இறுக்கி கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மதன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, மஞ்சுவிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு கயிற்றால் மதன் கழுத்தை இறுக்கியுள்ளார்.
பின்னர் மதனின் உறவினர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்ட மஞ்சு குடிபோதையில் வீட்டிற்கு வந்த மதன் மயங்கி விழுந்ததில் பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
2 பேர் கைது
இதனால் மதனின் உறவினர்கள் பதறியபடி மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர். அப்போது, மதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மதனின் கழுத்து கயிற்றால் இறுக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. இதனால் சாவில் மர்மம் இருப்பதாக ஈரோடு தாலுகா போலீசில் நேற்று காலை உறவினர்கள் புகார் செய்தனர். 
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து..
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி, சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா ஆகியோர் மஞ்சுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலன் ராஜாவுடன் சேர்ந்து மதனை கொலை செய்ததை மஞ்சு போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். போலீசார் மஞ்சுவிடம் மேலும் விசாரணையை முடுக்கி விட்டனர். 
அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
மதன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து என்னை அடித்து வந்தார். மேலும் அவர் எனக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்தார். இதனால் நான் அவரை கொலை செய்ய திட்ட மிட்டேன். இதற்காக அருகில் வசிக்கும் ராஜா(35) என்பவரை உதவிக்கு அழைத்தேன். அதன் பேரில் அவர் எனது வீட்டுக்கு வந்தார். பின்னர் நாங்கள் 2 பேரும் சேர்ந்து மதனின் கழுத்தை கயிற்றால் இறுக்கிேனாம். இதில் அவர் இறந்துவிட்டார்
இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் மஞ்சு மற்றும் ராஜாவை கைது செய்தனர்.

Next Story