விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 11 Sept 2021 2:58 AM IST (Updated: 11 Sept 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு
விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
கோபி
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பாக நடந்தது. கோபி வேலுமணி நகரில் சக்தி விநாயகர் கோவில் காலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலித்தார். இதையடுத்து சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையொட்டி கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கோபி வாய்க்கால் ரோட்டில் சந்தியாவந்தனம் துறையில் அமைந்துள்ள பிங்கள விநாயகருக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், குங்குமம், விபூதி உள்பட 16 பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
மேலும் பார்க் விநாயகர் கோவில், குள்ளம்பாளையம் ஆசிரியர் நகர் விநாயகர் கோவில், வடக்கு வீதி விநாயகர் கோவில், வாஸ்து நகர் விநாயகர் கோவில், கோபி திருமலை நகரில் உள்ள காரிய சித்தி விநாயகர் கோவில், கோபி மாதேஸ்வரர் கோவில் வீதியில் உள்ள விநாயகர் உள்பட கோபி பகுதியில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்து சென்றனர். 
பெருந்துறை
இதேபோல் பெருந்துறையில் குன்னத்தூர் ரோட்டில் பெத்தாம்பாளையம் பிரிவில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து சந்தன காப்பு, மலர் மற்றும் வெற்றிலை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலித்தார்.  
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிைய பயபக்தியுடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அந்தியூர்
விநாயகர் சதுர்த்தியையொட்டி அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள ராஜகணபதி கோவிலில் விநாயகருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் கொழுக்கட்டை, சுண்டல், அவல், பாயாசம் ஆகியவை படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. 
இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமியை தரிசனம் செய்து சென்றனர். 
அந்தியூர் பாலம் அருகே உள்ள ராஜகணபதி கோவிலில் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் சாமியை வழிபட்டு சென்றனர். ஆப்பக்கூடல் அருகே வெள்ளாளபாளையத்தில் உள்ள ராஜகணபதி கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வேம்பத்தி, வெள்ளாளபாளையம், ஆப்பக்கூடல், கரட்டுப்பாளையம், புதுப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
இதேபோல் பர்கூர் ரோட்டில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு உள்ள வலம்புரி விநாயகர் கோவில், கெட்டிசமுத்திரத்தில் சர்ப்ப விநாயகர் மற்றும் ஆப்பக்கூடல், பர்கூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கவுந்தப்பாடி-சிவகிரி
கவுந்தப்பாடி சந்தை பேட்டை சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 10 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 12 மணி அளவில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது வெள்ளிக்கவச அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
இதேபோல் கவுந்தப்பாடி அருகே உள்ள கவுண்டன்புதூர் விநாயகர் கோவில் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.  தொடர்ந்து நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் கேப்டன் துரை என்கிற கே.பி.துரைராஜ் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். 
சிவகிரி கிழக்கு ரத வீதியில் உள்ள ஆலமர விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோல் வேட்டுவப்பாளையம் விநாயகர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 
பவானிசாகர்- ஊஞ்சலூர்
பவானிசாகர், கொத்தமங்கலம், எரங்காட்டூர், பகுத்தம்பாளையம், புங்கார், அக்கரை தத்தப்பள்ளி மற்றும் பவானிசாகர் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. 
இதில் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி விட்டும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்து சென்றனர். 
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊஞ்சலூர் நாகேஸ்வர சாமி கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவிலில், கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவிலில் உள்ள விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. 

Next Story