நம்பியூரில், கடையில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அதிகாரிகள் அகற்றி வாகனத்தில் ஏற்றியதற்கு எதிர்ப்பு; சரக்கு ஆட்டோவை இந்து முன்னணியினர் சிறை பிடித்ததால் பரபரப்பு
நம்பியூரில் கடையில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அதிகாரிகள் அகற்றி வாகனத்தில் ஏற்றியதற்கு இந்துமுன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சரக்கு ஆட்டோவை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நம்பியூர்
நம்பியூரில் கடையில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அதிகாரிகள் அகற்றி வாகனத்தில் ஏற்றியதற்கு இந்துமுன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சரக்கு ஆட்டோவை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆய்வு
நம்பியூர் தாலுகாவுக்கு உள்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை முதலே கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.
இந்த நிலையில் நம்பியூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. இதற்கிடையே நம்பியூர் அருகே உள்ள கெடாரை, செட்டியம்பதி உள்பட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளதா? என நம்பியூர் தாசில்தார் மாரிமுத்து கண்காணித்து வந்தார்.
சிலையை அகற்றும் பணியில்...
அப்போது நம்பியூர் பஸ் நிலையம் எதிரே ஒரு கடையின் முன்புறத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்ததை கண்டார். அந்த சிலை பொது இடத்தில் இருப்பதாக கூறி அந்த சிலையை அப்புறப்படுத்த நம்பியூர் பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பேரூராட்சி ஊழியர்கள் அங்கு வந்து விநாயகர் சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக சரக்கு ஆட்டோ கொண்டு வரப்பட்டு அதில் அந்த சிலையை பேரூராட்சி ஊழியர்கள் ஏற்றினர். பின்னர் அந்த சரக்கு ஆட்டோ அங்கிருந்து புறப்பட்டது.
முற்றுகை
உடனே அங்கிருந்த இந்து முன்னணியினர் சிலையை நாங்கள் கடைக்கு உள்ளே, தனியார் இடத்தில் தான் வைத்து உள்ளோம். எனவே விநாயகர் சிலையை இங்கிருந்து அகற்றக்கூடாது. விநாயகரை நாங்கள் வழிபட அனுமதி தர வேண்டும் எனக்கோரி சரக்கு ஆட்டோவை முற்றுகையிட்டு, அதை வழிமறித்து ரோட்டில் உட்கார்ந்தனர். இதைத்தொடர்ந்து தாசில்தார் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முடிவில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கடையின் உள்புறத்தில் விநாயகர் சிலையை வைத்து வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதில் சமாதானம் அடைந்த இந்து முன்னணியினர், விநாயகர் சிலையை கடையின் உள்புறத்தில் வைத்து வழிபட்டனர். பின்னர் மாலையில் அந்த சிலை எடுத்து செல்லப்பட்டு கொடிவேரி பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் நம்பியூர் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story