காவிரி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு


காவிரி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு
x
தினத்தந்தி 11 Sep 2021 9:11 PM GMT (Updated: 11 Sep 2021 9:11 PM GMT)

ஊஞ்சலூர் காரணாம்பாளையத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி கேரளாவை சேர்ந்த 2 வாலிபர்கள் இறந்தார்கள்.

ஊஞ்சலூர் காரணாம்பாளையத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி கேரளாவை சேர்ந்த 2 வாலிபர்கள் இறந்தார்கள். 
கேரளாவை சேர்ந்தவர்கள்
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த பாபு என்பவரின் மகன் கிரண்பாபு (வயது 23). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
மலப்புரம் மாவட்டம் பொன்னானியை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகன் எது (22). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கிரண்பாபுவும், எதுவும் நண்பர்கள். இருவரும் தங்களுடைய நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முகாசிபிடாரியூரில் இருக்கும் தங்களுடைய நண்பர் நரேந்திரன் என்பவர் வீட்டுக்கு நேற்று வந்தார்கள்.
தண்ணீரில் மூழ்கினார்கள்...
இந்தநிலையில் நண்பர்கள் அனைவரும் 2 கார்களில் ஊஞ்சலூர் காரணாம்பாைளயத்தில் உள்ள காவிரி ஆற்று தடுப்பணைக்கு நேற்று மாலை சுற்றுலா வந்தார்கள். பின்னர் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்தனர். 
அப்போது கிரண்பாபுவும், எதுவும் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கிவிட்டார்கள். அருகே குளித்துக்கொண்டு இருந்த நண்பர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர். ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்கள் சத்தம் கேட்டு உடனே அங்கு பரிசலில் விரைந்து வந்தார்கள். 
உடல்கள் மீட்பு
அதன்பின்னர் ஆற்றுக்குள் குதித்து இருவரையும் தேடினார்கள். சிறிது நேரத்தில் 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் அதற்குள் இருவருமே இறந்துவிட்டார்கள். 
இதுகுறித்து மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
ஆழம் நிறைந்த பகுதி
காரணாம்பாளையம் தடுப்பணை ஆழம் நிறைந்த பகுதியாகும். இதுகுறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளியூரில் இருந்து வருபவர்கள் குறிப்பாக வாலிபர்கள் இதை பற்றி கவலைப்படாமல் உயிரை இழக்கிறார்கள். 
பெரும்பாலும் மதுகுடித்துவிட்டு தண்ணீரில் குளிப்பவர்கள் அடித்து செல்லப்படுகிறார்கள். அதனால் காரணாம்பாளையம் தடுப்பணையில் நிரந்தரமாக போலீசாரை பணியில் அமர்த்தி சுற்றுலா பயணிகளை கண்காணிக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

Next Story