சாலையில் ஓடி வீணான தண்ணீர்


சாலையில் ஓடி வீணான தண்ணீர்
x
தினத்தந்தி 11 Sep 2021 9:22 PM GMT (Updated: 2021-09-12T02:52:11+05:30)

ஈரோடு பவானி ரோட்டில் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக சென்றது.

ஈரோடு பவானி ரோட்டில் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக சென்றது.
ஊராட்சிக்கோட்டை    குடிநீர் திட்டம்
ஈரோடு மாநகர் பகுதியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. மாநகர் பகுதி முழுவதும் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கு நேரடியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநகரின் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
ஏற்கனவே இருந்த குடிநீர் தொட்டிகளில் நீரேற்றம் செய்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு வீடு, அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட குழாய்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
சாலையில் குடிநீர்
குடிநீர் வினியோகத்துக்காக சாலைகளில் குழி தோண்டி புதைக்கப்பட்டு உள்ள குழாய்களில் திடீர் உடைப்பு ஏற்படுவதும், ஆங்காங்கே குடிநீர் ஆறுபோல் வீணாக ஓடுவதும் தினசரி வாடிக்கையாக உள்ளது. அதன்படி நேற்று ஈரோடு பவானி ரோடு, வ.உ.சி.பூங்கா அருகே சாலையில் குடிநீர் வீணாக ஓடியது.
ஆறாக ஓடிய வெள்ளம் ஆங்காங்கே குட்டையாக தேங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
40 ஆயிரம் இணைப்புகள்
இதுபற்றி குடிநீர் வடிகால்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வீடுகளுக்கும் ஊராட்சிக்கோட்டை திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விரைவில் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே சுமார் 40 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டு வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள இணைப்புகள் அனைத்தும் 3 மாதங்களில் வழங்கப்படும். இதற்காக குழாய்களில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அப்போது சில பகுதிகளில் ஏற்படும் உடைப்புகள் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன. வ.உ.சி.பூங்கா பகுதியில் குழாய் வால்வுகள் (அடைப்பான்) பிரச்சினையால் இந்த உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இது உடனடியாக சரி செய்யப்படும்’ என்றார்.
அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ‘இங்கு அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. தண்ணீர் வீணாகாமல் இருக்க அதிகாரிகள் நிரந்த தீர்வு காணவேண்டும்’ என்றார்.

Next Story