நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்


நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Sept 2021 4:17 AM IST (Updated: 12 Sept 2021 4:17 AM IST)
t-max-icont-min-icon

கவர்ச்சிகர திட்டங்கள் மூலம் பணம் மோசடி செய்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தனியார் நிதி நிறுவனம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, ஆந்திர மாநிலம் நகரி, புத்தூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் நெசவு தொழிலாளர்கள் பல லட்ச ரூபாய் பணத்தை கட்டி முதலீடு செய்து வந்தனர்.தொடக்கத்தில் பணம் கட்டியவர்களுக்கு அரிசி மூட்டை, பெட்ரோல் போடுவதற்கு டோக்கன், மளிகை சாமான் பொருட்கள் போன்ற கவர்ச்சிகரமான பொருட்களை குறைந்த விலையில் அறிவித்து வழங்கி வந்தனர்.
அதன் பிறகு பொதுமக்கள் செலுத்தும் ரூ.35 ஆயிரத்துக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வட்டி என்றும், 1 லட்சம் ரூபாய் கட்டினால் மாதம் ரூ.10 ஆயிரமும், ரூ.2 லட்சம் ரொக்கமாக கட்டினால் புதிய கார் வாங்கித்தருகிறோம் என்றும் பல வகையான கவர்ச்சி திட்டங்களை அறிவித்தனர்.

மாயம்
இதனால் இந்த பகுதிகளைச் சேர்ந்த நெசவு கூலித்தொழிலாளர்கள் அதிக அளவில் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். அந்த வகையில் ரூ.200 கோடி நிதியை அந்த நிறுவனம் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.
தொடக்கத்தில் சொன்ன தேதியில் வட்டியை அளித்து வந்த இந்த நிறுவனம் அதன் பிறகு நாளடைவில் வட்டி பணத்துக்கு துண்டு சீட்டில் எழுதி கொடுத்து வந்தனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் தங்களது பணத்தை திருப்பித் தரும்படி இந்த நிறுவனத்தை அணுகி கேட்டனர்.ஆனால் அவர்கள் சரிவர பதில் கூறாத நிலையில், நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருத்தணி அருகில் உள்ள பூனிமாங்காடு என்ற பகுதியில் பஞ்சு ஆலையில் இயங்கி வந்த இந்த தனியார் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்ற போது அனைவரும் மாயமான தகவல் தெரியவந்தது.

சாலை மறியல்
இதனால் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை அறிந்து கொண்ட அந்த பொதுமக்கள், நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுத்தரக்கோரி திருத்தணி பைபாஸ் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனியாக இயங்கிவரும் குற்றப்பிரிவு துறையில் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள், சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story