யார் கவர்னராக வந்தாலும் மோடி அரசின் முகவர்களாகத்தான் இருப்பார்கள்- ஈரோட்டில் ரா.முத்தரசன் பேட்டி


யார் கவர்னராக வந்தாலும் மோடி அரசின் முகவர்களாகத்தான் இருப்பார்கள்- ஈரோட்டில் ரா.முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 13 Sept 2021 3:36 AM IST (Updated: 13 Sept 2021 3:36 AM IST)
t-max-icont-min-icon

யார் கவர்னராக வந்தாலும் மோடி அரசின் முகவர்களாகத்தான் இருப்பார்கள் என்று ஈரோட்டில் ரா.முத்தரசன் கூறினார். கம்யூனிஸ்டு முத்தரசன் பேட்டி

ஈரோடு
யார் கவர்னராக வந்தாலும் மோடி அரசின் முகவர்களாகத்தான் இருப்பார்கள் என்று ஈரோட்டில் ரா.முத்தரசன் கூறினார்.
நூற்றாண்டு விழா
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் மாதம் 11-ந் தேதி மகாகவி நாளாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனை நாங்கள் வரவேற்கிறோம்.
முகவர்கள்
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கடந்த 28-ந்தேதி தமிழக அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அப்போது, அவையில் இருந்த அ.தி.மு.க. ஏன் வெளிநடப்பு செய்தது என்று அவர்கள் விளக்க வேண்டும். தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட்டு உள்ளார். யார் வந்தாலும் மோடி அரசின் முகவர்களாக தான் இருப்பார்கள்.
பொதுத்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டதை கண்டித்தும், வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டம்
அதன்படி, தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வருகிற 20-ந்தேதி கொரோனா தொற்று பரவல் காரணமாக அவரவர் வீட்டின் முன்பு நின்று கருப்புக்கொடி போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி முழுமையாக பங்கேற்கும்.
மேலும் வருகிற 27-ந்தேதி, நாடு முழுவதும் வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த வேண்டுகோளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரித்து, போராட்டத்தில் பங்கேற்க உள்ளது. இதேபோல் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன் கூறினார்.
உருவப்படம் திறப்பு
முன்னதாக ஈரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா நடந்தது. விழாவுக்கு மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு வரவேற்றார். மாநில செயலாளர் ரா.முத்தரசன், துணைச்செயலாளர் சுப்பராயன் எம்.பி. ஆகியோர், மகாகவி பாரதியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து, மரியாதை செலுத்தினார்கள்.
இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சின்னசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் சி.எம்.துளசிமணி, ரமணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story