847 மையங்களில், கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்- 97 ஆயிரத்து 198 பேருக்கு செலுத்தப்பட்டது


847 மையங்களில்,  கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்- 97 ஆயிரத்து 198 பேருக்கு செலுத்தப்பட்டது
x
தினத்தந்தி 13 Sept 2021 3:36 AM IST (Updated: 13 Sept 2021 3:36 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டம் முழுவதும் 847 மையங்களில் நடந்த மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 97 ஆயிரத்து 198 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டம் முழுவதும் 847 மையங்களில் நடந்த மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 97 ஆயிரத்து 198 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவிற்கிணங்க, தமிழகம் முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி எனும் உயரிய நோக்கில் நேற்று தமிழகம் முழுவதும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உட்பட 847 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணையாக 1 லட்சத்து 5 ஆயிரத்து 400 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் 97 ஆயிரத்து 198 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
3 ஆயிரம் பணியாளர்கள்
மேலும், இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். 70 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட்டன.
முன்னதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமினை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார்.
ஆய்வு
இதைத்தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட திண்டல் அரசு மேல்நிலை பள்ளிக்கூடம், பெருந்துறை ஒன்றியம் சீனாபுரம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடம், திங்களூர் பகுதியில் உள்ள அப்பிச்சிமார் மடம், சிறுவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட டைமண்ட் ஜூப்லி பள்ளிக்கூடம் ஆகியவற்றில் நடைபெற்ற மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி மற்றும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது இவர்களுடன், மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாநகராட்சிஆணையாளர் இளங்கோவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் உட்பட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டு இருந்த முகாமுக்கு சென்று ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Next Story