படப்பை அருகே நீட் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் சாலை மறியல்


படப்பை அருகே நீட் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Sept 2021 6:44 PM IST (Updated: 13 Sept 2021 6:44 PM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே நீட் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படப்பை,

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுதேர்வு நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 4 மையங்களில் மாணவ-மாணவிகள் நீட் நுழைவு தேர்வு எழுதினர். இதில் ஒரு மையமான குன்றத்தூர் ஒன்றியம் கீழ் படப்பை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. இதில் காஞ்சீபுரம் திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். காலை 11 மணிக்கு மாணவர்களின் அனுமதி அட்டை உள்ளிட்டவைகளை சரிபார்த்து நீட் தேர்வு எழுதும் பள்ளியின் நுழைவு பகுதியில் இருந்து மாணவர்களை உள்ளே அனுமதித்தனர். இதில் அனுமதி அட்டையை பணியில் இருந்தவர்கள் வாங்கவில்லை.

இதனால் அனுமதி அட்டையை மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றனர். அனுமதி அட்டையை வாங்கிய பெற்றோர் சிலர் நீட் தேர்வு நடைபெறும் பள்ளியின் வெளிப்பகுதியில் காத்திருந்தனர். ஒரு சிலர் அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

சாலை மறியல்

ஆனால் உள்ளே சென்ற மாணவ- மாணவிகளிடம் அனுமதி அட்டையை எடுத்து வரவேண்டும் என அங்கு இருந்தவர்கள் கூறியதையடுத்து பள்ளியின் நுழைவு வாயில் அருகே வந்து பெற்றோர்களிடம் அனுமதி அட்டையை வாங்கி கொண்டனர். ஒரு சில மாணவர்களின் பெற்றோர் அங்கு இல்லாததால் மாணவ-மாணவிகளால் அனுமதி அட்டையை வாங்க முடியவில்லை. நுழைவு வாயில் பகுதியில் மாணவ-மாணவிகளின் பெற்றோர் மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள் என்று கூச்சலிட்டனர். இதனையடுத்து நீட் தேர்வு மையத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முத்து மாதவன் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அனுமதி அட்டை இல்லாமல் இருந்த மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு எழுதி முடிவதற்குள் பெற்றோர் அனுமதி அட்டை எடுத்து வந்து கொடுக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு சில மாணவர்களின் பெற்றோர்கள் அனுமதி அட்டையை எடுத்து வந்து நீட் தேர்வு நுழைவு வாசலில் உள்ள அலுவலரிடம் கொடுத்தனர். ஒரு சில பெற்றோர் 5 மணி ஆகியும் புகைப்படத்துடன் கூடிய அனுமதி அட்டையை எடுத்து வர வில்லை. மாலை 5½ மணி ஆன பிறகும் நீட் தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் வெளியே வராததை கண்டு திடீரென பெற்றோர்கள் 150-க்கும் மேற்பட்டோர் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் மறியலில் ஈடுபட்டு கோஷமிட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனைத்தொடர்ந்து ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் ஷண்முகம் மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.

இதனால் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகள் நீட் நுழைவு தேர்வு மையத்தில் இருந்து வெளியே வருவதை கண்ட பெற்றோர் அமைதி அடைந்தனர்.

Next Story