ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆம்புலன்சில் வந்து கோரிக்கை மனு கொடுத்த தொழிலாளி
ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு தொழிலாளி ஆம்புலன்சில் வந்து கோரிக்கை மனு கொடுத்தார்.
ஈரோடு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு தொழிலாளி ஆம்புலன்சில் வந்து கோரிக்கை மனு கொடுத்தார்.
ஆம்புலன்ஸ்
அந்தியூர் அருகே சங்கராபாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). இவர் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு உறவினருடன் ஆம்புலன்சில் வந்து கோரிக்கை மனு கொடுக்க வந்தார். அவர் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-
நான் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தேன். எனக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடந்து சென்றபோது தவறி கீழே விழுந்தேன். இதில் முதுகு தண்டுவட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால், நடக்க முடியாத நிலையில் உள்ளேன். இந்தநிலையில் எனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை என் அண்ணன் அபகரித்து உள்ளார். எனது மனைவியும், மகனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள். நான் வயதான தாயின் பராமரிப்பில் இருந்து வருகிறேன். என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. எனவே எனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வேண்டும். மேலும், என்னை அரசு காப்பகத்தில் சேர்த்து தன்னை பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.
நடைமேடை
ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்க செயலாளர் பாரதி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-
ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகளில் நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 80 அடி மற்றும் 100 அடி சாலைகளுக்கு மட்டுமே சாத்தியமானது. ஆனால் குறுகிய சாலைகளான ஸ்டேட் வங்கிரோடு, கலைமகள் ரோடு, பழைய பூந்துறைரோடு உள்ளிட்ட சாலைகளில் நடைமேடை அமைக்கப்படுவதால், சாலையின் அகலம் குறைந்து விடுகிறது. இதனால் வாகனங்களை ரோட்டில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே குறுகிய சாலைகளில் நடைமேடை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அல்லது நடைமேடை அகலத்தை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
வீட்டுமனை பட்டா
மொடக்குறிச்சி, பூந்துறை பகுதிகளில் விலையில்லா வீட்டுமனை பட்டா பெற்ற பொதுமக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
ஈரோடு வெண்டிபாளையத்தில் வசிக்கும் எங்களுக்கு நிலம், வீடு கிடையாது. சிலர் நீர்நிலை ஆக்கிரமிப்பில் வசிக்கிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க பல ஆண்டுகளாக மனு கொடுத்து வந்தோம். அதன்பிறகு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 13-ந் தேதி பவானிக்கு வந்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 82 பேருக்கு பட்டா வழங்கினார். இதைத்தொடர்ந்து பலருக்கும் அதே இடத்தில் பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டாக்கள் ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டது.
எங்களிடம் இதுவரை நிலத்தை ஒப்படைக்காமல் அதே இடத்துக்கு வேறு சிலருக்கும் பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இந்த தவறுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story