ஈரோட்டில் போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிய வியாபாரி கைது


ஈரோட்டில் போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிய வியாபாரி கைது
x
தினத்தந்தி 14 Sept 2021 7:02 AM IST (Updated: 14 Sept 2021 7:02 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு
ஈரோட்டில் போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
அரிவாள் வெட்டு
ஈரோடு பவானிரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று முன்தினம் மது வாங்க சென்ற ஒருவர் டாஸ்மாக் கடை ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஏட்டு ராஜூ (வயது 45) சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
கடையில் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்த அந்த நபரை வெளியில் செல்லுமாறு போலீஸ் ஏட்டு ராஜூ அறிவுறுத்தினார். ஆனால் அந்த நபர் தொடர்ந்து தகராறு செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜூவை வெட்டினார். இதில் ராஜூவின் மார்பு பகுதி, கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது.
கைது
அங்கிருந்தவர்கள் ராஜூவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிய நபரை அக்கம் பக்கத்தினர் மடக்கி பிடித்தனர். அந்த நபரை போலீசார் ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அந்த நபர் ஈரோடு தண்ணீர்பந்தல்பாளையத்தை சேர்ந்த முருகன் (45) என்பதும், மரம் ஏறும் தொழிலாளியான அவர் இளநீர் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முருகன் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் ஈரோடு கோர்ட்டில் முருகனை போலீசார் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story