பில்லி சூனியம் எடுப்பதாக புதுப்பெண்ணிடம் நகை மோசடி போலி மந்திரவாதியை போலீஸ் தேடுகிறது


பில்லி சூனியம் எடுப்பதாக புதுப்பெண்ணிடம் நகை மோசடி போலி மந்திரவாதியை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 14 Sept 2021 3:43 PM IST (Updated: 14 Sept 2021 3:43 PM IST)
t-max-icont-min-icon

கணவர் பிரிந்து விடுவார் என்று மிரட்டல் பில்லி சூனியம் எடுப்பதாக புதுப்பெண்ணிடம் நகை மோசடி போலி மந்திரவாதியை போலீஸ் தேடுகிறது.

சென்னை,

சென்னை ராயப்பேட்டை யானைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரிகானாபேகம் (வயது 21). சமீபத்தில்தான் இவருக்கு திருமணம் நடந்தது. இவரது கணவர் மன்சூர்பாஷா வெளியே சென்றுவிட்டதால் ரிகானாபேகம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, மர்மநபர் ஒருவர் கையில் சாம்பிராணி புகைபோடும் தட்டுடன் அங்கு வந்தார்.

இந்த வீட்டில் பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது. அதை எடுக்காவிட்டால் உங்கள் கணவர் உங்களை விட்டு பிரிந்து சென்று விடுவார் என்று அந்த மர்ம நபர் ரிகானாபேகத்தை மிரட்டியதுடன், ரூ.300 கொடுத்தால் வீட்டில் ஒரு பூஜை போட்டு பில்லி சூனியத்தை எடுத்து விடுவேன் என்றும் கூறினார். அதை நம்பி ரிகானா பேகமும் ரூ.300 கொடுத்தார். பின்னர் அந்த மர்ம நபர், ரிகானா பேகம் கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்கசங்கிலியை கழற்றி கேட்டு வாங்கி, அதை ஒரு பேப்பரில் சுற்றி மண் பானை ஒன்றில் போட்டார். ஒரு மணி நேரம் கழித்து மண்பானைக்குள் கிடக்கும் தங்கசங்கிலியை எடுத்துக் கொள்ளுங்கள், பில்லி சூனியம் அகன்று விட்டது, என்று கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.

ஒரு மணி நேரம் கழித்து மண்பானைக்குள் பார்த்தால் பேப்பரில் வைத்திருந்த தங்க சங்கிலியை காணவில்லை. அதற்குள் கல் இருந்தது. அதன்பிறகுதான், ரிகானா பேகம் தன்னை ஏமாற்றி அந்த நபர் தங்க சங்கிலியை பறித்து சென்றதை உணர்ந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஐஸ்-அவுஸ் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலி மந்திரவாதியை தேடி வருகிறார்கள்.

Next Story