ஈரோட்டில் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு- 5 கடைகளுக்கு நோட்டீசு
ஈரோட்டில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினார்கள். இதில் 5 கடைகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.
ஈரோடு
ஈரோட்டில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினார்கள். இதில் 5 கடைகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.
திடீர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் கடந்த 8-ந் தேதி உணவு சாப்பிட்ட சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். மேலும், 24 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் தரமான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின்பேரில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அதிகாரி தங்க விக்னேஷ் மற்றும் அதிகாரிகள் ஈரோடு காந்திஜிரோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று காலை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது குளிர்பதன பெட்டியில் முந்தையநாள் சமைத்த அசைவ உணவுகள் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவதற்காக வைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த உணவுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் குப்பை தொட்டியில் கொட்டி அழித்தனர். இதேபோல் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
ரூ.5 ஆயிரம் அபராதம்
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தங்கவிக்னேஷ் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 17 உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது உணவகங்களில் ஏற்கனவே சமைத்து பதப்படுத்தப்பட்ட உணவுகள் மீண்டும் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் தயார் செய்து, உணவு வழங்க வேண்டும். எனவே பதப்படுத்தப்பட்ட 40 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 5 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. அந்த உணவகங்களில் தவறுகளை சரிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
2 உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியதற்காக தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உணவில் அதிக நிறங்கள் சேர்க்கப்படுகிறது. நிறமுள்ள உணவுகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்கப்பட வேண்டும். உணவகங்களிலும் நிறங்களை சேர்க்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளோம்.
புகார்
உணவகங்களின் தேவைக்காக இறைச்சியை கடைகளில் வாங்கும்போது ரசீது பெற்றிருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையில் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. மேலும், உணவகங்களில் தரமில்லாத உணவு பொருட்கள் இருப்பது தெரியவந்தால் 94440 42322 என்ற செல்போன் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story