ஈரோட்டில் வீட்டுமனை விற்பதாக கூறி 23 பேரிடம் ரூ.63 லட்சம் மோசடி- ரியல் எஸ்டேட் அதிபர் கைது
ஈரோட்டில் வீட்டுமனை விற்பதாக கூறி 23 பேரிடம் ரூ.63 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
ஈரோட்டில் வீட்டுமனை விற்பதாக கூறி 23 பேரிடம் ரூ.63 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
புகார் மனு
ஈரோடு சூளை ஈ.பி.பி.நகரை சேர்ந்தவர் தேவராஜன். இவருடைய மனைவி லதா (வயது 48). இவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருந்ததாவது:-
ஈரோடு நரிபள்ளம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். கடந்த 2017-ம் ஆண்டு சொந்தமாக வீடு கட்டுவதற்காக இடம் தேடி கொண்டு இருந்தேன். அப்போது ஸ்டார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் ஈரோடு நசியனுார்ரோடு எறுக்கங்காட்டுவலசு ஸ்டார் நகரில் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது தெரியவந்தது. மேலும், முதலில் வருபவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி உண்டு என்கிற கவர்ச்சிகரமான விளம்பரமும் செய்யப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தை அணுகியபோது நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்டார்பாபு என்கிற பாபுதஸ்தகீர் (40) என்பவர் என்னிடம் பேசினார். அப்போது எறுக்கங்காட்டுவலசு ஸ்டார் நகரில் 2 ஆயிரத்து 200 சதுர அடி கொண்ட வீட்டுமனையை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறிய அவர், அதில் வீடு கட்டுவதற்கு சேர்த்து மொத்தம் ரூ.19 லட்சத்து 50 ஆயிரத்துக்கு பேசி முடிவு செய்யப்பட்டது.
ரூ.63 லட்சம்
அதன்பிறகு 2 தவணைகளாக ரூ.6 லட்சத்து 61 ஆயிரம் அவரிடம் கொடுத்தேன். அதற்கு ரசீது மட்டும் கொடுத்த அவர் உடன்படிக்கை பத்திரத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தினார். இதனால் சந்தேகம் ஏற்பட்டபிறகு விசாரணை செய்து பார்த்தேன். அப்போது எனக்கு காண்பித்த இடம் ஸ்டார் பாபுவுக்கு சொந்தமானது கிடையாது என்று தெரியவந்தது. இதனால் அவரிடம் சென்று பணத்தை திருப்பி கேட்டபோது அவர் கொடுக்க மறுத்துவிட்டார். மேலும், போலீசில் சென்று புகார் கொடுத்தால் உயிரோடு எரித்து கொன்றுவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்தார். எனவே எனது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார். இந்த மனுவை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ஸ்டார் பாபு மொத்தம் 23 பேரிடம் சுமார் ரூ.63 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு பெரியார்நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்த ஸ்டார் பாபுவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story