பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு- பவானி ஆற்றில் 5,800 கனஅடி தண்ணீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு- பவானி ஆற்றில் 5,800 கனஅடி தண்ணீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Sept 2021 2:51 AM IST (Updated: 15 Sept 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானி ஆற்றில் 5 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பவானிசாகர்
பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானி ஆற்றில் 5 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. இந்த அணையின் மொத்த நீர்ப்பிடிப்பு கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் தற்போது பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு  வினாடிக்கு 3,036 கன அடி தண்ணீர் வந்தது. 
நேற்று மாலை 4 மணியளவில் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 5,856 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 102 அடியாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு வினாடிக்கு 486 கன அடி தண்ணீரும், உபரிநீராக வினாடிக்கு 5,114 கன அடியும் திறக்கப்பட்டது. பவானி ஆற்றில் மொத்தம் வினாடிக்கு 5,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் வினாடிக்கு 5,800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
 பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வருவாய்த் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Next Story