என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் ஈரோடு அரசுப்பள்ளி மாணவி 5-ம் இடம் பிடித்தார்; ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன் என்று பேட்டி


என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் ஈரோடு அரசுப்பள்ளி மாணவி 5-ம் இடம் பிடித்தார்; ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன் என்று பேட்டி
x
தினத்தந்தி 14 Sep 2021 9:21 PM GMT (Updated: 14 Sep 2021 9:21 PM GMT)

என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் 5-ம் இடம் பிடித்த ஈரோடு அரசு பள்ளிக்கூட மாணவி தர்ஷினி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன் என்று கூறினார்.

ஈரோடு
என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் 5-ம் இடம் பிடித்த ஈரோடு அரசு பள்ளிக்கூட மாணவி தர்ஷினி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன் என்று கூறினார்.
தரவரிசையில் ஈரோடு மாணவி
தமிழக அளவில் என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் அளவிலான தர வரிசை பட்டியலில் ஈரோட்டை சேர்ந்த அரசு பள்ளிக்கூட மாணவி தர்ஷினி 5-வது இடத்தை பெற்று சாதனை படைத்து உள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
ஈரோடு பெரியசேமூர் சூளை மல்லி நகர் பகுதியை சேர்ந்தவர் பி.உத்திரசாமி. இவரது மகள் யு.தர்ஷினி. கடந்த கல்வி ஆண்டு (2020-2021) ஈரோடு வீரப்பன்சத்திரம் எம்.ஆர்.ஜி. மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தார். பிளஸ்-2 வில் 600 -க்கு 585.14 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். நேற்று வெளியிடப்பட்ட என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பட்டியலில் இவர் 196.165 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 5-வது இடத்தை பெற்று உள்ளார்.
பாராட்டு
அவருக்கு பெற்றோர், உறவினர்கள் மற்றும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கே.ஜெயந்தி மற்றும் ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் 5-வது இடத்தை பெற்று சாதனை படைத்த மாணவி யு.தர்ஷினி கூறியதாவது:-
நான் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை ஈரோடு சுக்கிரமணிய வலசு அரசு பள்ளிக்கூடத்தில் படித்தேன். 9-ம் வகுப்பு முதல் வீரப்பன்சத்திரம் எம்.ஆர்.ஜி. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். 10-ம் வகுப்பில் 500-க்கு 484 மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ்-1 வகுப்பில் கணிதம், கணினி அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்து எடுத்தேன். பிளஸ்-1 பொதுத்தேர்வில் 600-க்கு 559 மதிப்பெண்கள் பெற்றேன்.
ஐ.ஏ.எஸ். ஆவேன்
பிளஸ்-2 வில் கொரோனா காரணமாக முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்தன. எங்கள் பள்ளிக்கூட ஆசிரியைகள் எங்களை உற்சாகமூட்டி படிக்க வைத்தனர். பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில் அரசு வழிகாட்டு முறைப்படி நான் 585.14 மதிப்பெண்கள் பெற்றேன். நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி என்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
ஆனால் பொருளாதார ரீதியாக அது முடியுமா என்று தெரியவில்லை. எனவே கோவை அல்லது சேலத்தில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியை தேர்ந்து எடுத்து என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்து விட்டு, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். கலெக்டர் ஆக வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. எனது பள்ளிக்கூட ஆசிரியைகளும், என்ஜினீயரிங் படித்து விட்டு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகலாம் என்று அறிவுரை வழங்கினார்கள். அதன்படி செயல்பட உள்ளேன்.
விருது பெற்றவர்
எனது தந்தை உத்தரசாமி ரசாயன நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். ஒரு விபத்து காரணமாக அவரால் இப்போது வேலைகள் எதுவும் செய்ய முடியாது. தாயார் கவிதா துணி பைகள் தைக்கும் குடிசைத்தொழில் செய்து வருகிறார். நான் வீட்டில் மூத்த பெண். எனது முதல் தங்கை சந்தியா 11-ம் வகுப்பிலும், இளைய தங்கை பென்சிகா 6-ம் வகுப்பிலும் படித்து வருகிறார்கள்.
இவ்வாறு மாணவி தர்ஷினி கூறினார்.
வீரப்பன்சத்திரம் எம்.ஆர்.ஜி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கே.ஜெயந்தி கூறும்போது, மாணவி தர்ஷினி படிப்பில் எப்போதும் சிறந்து விளங்கினார். படிப்பில் மட்டுமின்றி பல்வேறு போட்டிகளிலும் சிறந்து விளங்கி வந்தார். 10-ம் வகுப்பு படிக்கும்போதே காமராஜர் விருது பெற்று சாதனை படைத்தவர். அவர் மூலம் எங்கள் பள்ளிக்கூடம் பெருமை பெற்று உள்ளது. அனைத்து மாணவிகளையும் சாதனை மாணவிகளாக மாற்ற வேண்டும் என்ற அற்பணிப்புடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்றார்.

Next Story