காதலித்து திருமணம் செய்த பெண்ணுக்கு கொலை மிரட்டல்- ஊர்க்காவல் படை வீரர் மீது புகார்


காதலித்து திருமணம் செய்த பெண்ணுக்கு கொலை மிரட்டல்- ஊர்க்காவல் படை வீரர் மீது புகார்
x
தினத்தந்தி 16 Sept 2021 3:30 AM IST (Updated: 16 Sept 2021 3:30 AM IST)
t-max-icont-min-icon

காதலித்து திருமணம் செய்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஊர்க்காவல் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு
காதலித்து திருமணம் செய்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஊர்க்காவல் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
காதலித்து திருமணம்
ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி (வயது 24) என்பவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனை சந்தித்து நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
 என்னுடைய வீட்டின் அருகில் வசித்து வரும் அஜித்குமார் என்னை காதலித்தார். அவர் வற்புறுத்தியதன் பேரில் நானும் காதலித்தேன். அஜித்குமார் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னுடன் நெருக்கமாக இருந்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன்.
இதற்கிடையில் அஜித்குமாருக்கு ஊர்க்காவல் படையில் வேலை கிடைத்ததால் அவர் என்னை திருமணம் செய்யாமல் காலம் கடத்தினார். இதனால் நான் அவரிடம் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியதால், கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி அவர் என் வயிற்றில் எட்டி உதைத்ததில் என் கரு கலைந்தது. அதனால் நான் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18-ந்தேதி அஜித்குமார் என்னை திருமணம் செய்து கொண்டார்.
பணியிடை நீக்கம்
அதன்பிறகு அவர் என்னுடன் வாழாமல், என்னை எனது பெற்றோர் வீட்டில் விட்டுச்சென்றுவிட்டார். நான் பலமுறை அவரை சந்தித்து பேசியும், அவர் என்னை ஏற்றுக்கொள்ளாமல் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் நான் கடந்த ஆண்டு மே 29-ந்தேதி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதன் பேரில் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். இந்தநிலையில் வழக்குகளை திரும்பப்பெறக்கோரி அஜித்குமார் தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார். 
புகார் மனுவை தொடர்ந்து, தற்போது அஜித்குமார் ஊர்க்காவல் படையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story