குழந்தை தொழிலாளர் திட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் அடிப்படை பயிற்சிகள்- கலெக்டர் தகவல்


குழந்தை தொழிலாளர் திட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் அடிப்படை பயிற்சிகள்- கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 Sep 2021 10:00 PM GMT (Updated: 15 Sep 2021 10:00 PM GMT)

குழந்தை தொழிலாளர் திட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சியில் வழங்கப்படும் அடிப்படை பயிற்சிகளை பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
குழந்தை தொழிலாளர் திட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சியில் வழங்கப்படும் அடிப்படை பயிற்சிகளை பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார். 
சிறப்பு பயிற்சி மையங்கள்
ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குழந்தை தொழிலாளர்கள் கணிசமாக உள்ள மாவட்டங்களில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 8 வயது முதல் 14 வயது வரையான குழந்தைகள் வருமானம் ஈட்டும் தொழில்களில் ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால், அவர்களை மீட்டு அடிப்படை கல்வி அளிக்கவும், மறுவாழ்வு மற்றும் வழிகாட்டுதல் அளிக்கவும் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்கள் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இயங்கி வருகிறது. இந்த மையங்களில் பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற மாணவ-மாணவிகளும் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது 15 சிறப்பு பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் 270 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு வயதுக்கு ஏற்ற வகுப்பில் படிக்க வைக்கப்படுகிறார்கள். 8-ம் வகுப்புக்கு மேல் அருகில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படுவார்கள்.
முதல்-அமைச்சர் அறிவுரை
கொரோனா தாக்கம் காரணமாக சிறப்பு மையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்தநிலையில் குழந்தை தொழிலாளர் திட்ட மையங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கல்வி தொலைக்காட்சியின் மூலம் அடிப்படை கல்வி பயிற்சிகள் வழங்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
அதன்படி சிறப்பு பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சியில் தினசரி பகல் 11 மணி முதல் 11.30 மணிவரை அடிப்படை கல்வி பயிற்சி நிகழ்ச்சியை பார்க்க தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட பணியாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டு நிறுவனத்தினர் ஏற்பாடு செய்யவும், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.

Next Story