சோலார் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி; அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார்
சோலார் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார்.
ஈரோடு
சோலார் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார்.
தற்காலிக பஸ் நிலையம்
ஈரோடு மத்திய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடங்கள், நடைமேடைகள் இடிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்தநிலையில் ஈரோடு மாநகரின் புறநகர் பஸ் நிலையமாக அமைய உள்ள சோலார் பஸ் நிலையத்தில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
கரூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட கரூர் ரோடு வழித்தடத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அமைச்சர் பார்வையிட்டார்
பஸ் நிலைய பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று பணிகளை பார்வையிட்டார்.
அப்போது தற்காலிக பஸ் நிலையத்துக்கு வாகனங்கள் செல்லும் வழி, பயணிகள் இறங்கும் வசதி, மீண்டும் அவர்கள் தங்களுக்கு உரிய பகுதிகளுக்கு செல்ல இணைப்பு பஸ்கள் இயக்கும் வசதி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். சோலார் தற்காலிக பஸ்நிலையம் முக்கிய சாலையில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. அங்கிருந்து பஸ் நிலையத்துக்கு செல்லும் பாதை குறுகலாக இருப்பதால் அது பயணிகளுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் பஸ் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள புதர்களையும் அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவிட்டார்.
இணைப்பு பஸ்கள்
பஸ் பயணிகள் ஈரோடு மத்திய பஸ் நிலையம் செல்லவும் வேறு பகுதிகளுக்கு செல்லவும் தேவையான அளவுக்கு இணைப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், செயற்பொறியாளர்கள் விஜயகுமார், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மத்திய பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணிகள் நடந்தாலும், சத்தி ரோடு, பவானி ரோடு, பெருந்துறை ரோடு வழியாக வரும் பஸ்கள் மத்திய பஸ் நிலையத்திலேயே பயணிகளை ஏற்றி இறக்கும். பயணிகளுக்கு சிரமம் இன்றி ஒவ்வொரு பகுதியாக பஸ் நிலையம் இடிக்கப்பட்டு, பணிகள் முடிக்கப்படும் என்று ஆணையாளர் எம்.இளங்கோவன் கூறினார்.
Related Tags :
Next Story