கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 93 நாட்களில் 5.051 டி.எம்.சி. தண்ணீர்


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 93 நாட்களில் 5.051 டி.எம்.சி. தண்ணீர்
x
தினத்தந்தி 20 Sep 2021 12:56 PM GMT (Updated: 20 Sep 2021 12:56 PM GMT)

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 93 நாட்களில் 5.051 டி.எம்.சி. தண்ணீர் வந்தடைந்தது.

நதி நீர் பங்கீடு திட்டம்

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்து புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த ஏரிகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பை குறைக்க வலியுறுத்தி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

தண்ணீர் குறைப்பு

3 நாட்களுக்கு முன் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியில் இருந்து 1200 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி முதல் நேற்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 93 நாட்களில் 5.051 டி.எம்.சி. தண்ணீர் வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இந்த ஏரியில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 33.40 அடியாக பதிவாகியது. 2.639 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வினாடிக்கு 110 கனஅடியாக வந்து கொண்டிருந்தது. அதேபோல் மழைநீர் வினாடிக்கு 247 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. பூண்டியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 327 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 270 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. பேபிகால்வாய் வழியாக சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 50 கனஅடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 14 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.


Next Story