ஆனைமலையில் நெல் கொள்முதல் மையம் திறப்பு
ஆனைமலையில் நெல் கொள்முதல் மையம் திறப்பு
பொள்ளாச்சி
ஆனைமலையில் நெல்கொள்முதல் மையம் திறக்கப்பட்டு உள்ளது. எனவே கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கொள்முதல் மையம்
பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை மூலம் புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகள் உள்ளன. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அங்கு 3,700 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டது தற்போது அறுவடைக்கு வந்து உள்ளது.
இதையடுத்து ஆனைமலை அருகே வடக்கலூர் மற்றும் குளப்பத்துக்குளம் பாசன பகுதிகளில் நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
திறப்பு விழா
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் மையத்தை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் மையத்தை நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் பிரசன்னா ராசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில் மேலாளர் (தரக்கட்டுப்பாடு) முத்துப்பாண்டி, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விலை போதுமானதாக இல்லை
இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறுகையில் விவசாயிகளிடமிருந்து சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1958-க்கும், பொது ரகம் ரூ.1918-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் முதல் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படும் என்றனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் தற்போது குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அடுத்த மாதம் கிலோவிற்கு ரூ.2 கூடுதலாக கொடுப்பதாக தெரிகிறது.
இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே குவிண்டாலுக்கு சன்ன ரகம் ரூ.2500-க்கும், பொதுரகம் ரூ.2450-க்கும் கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story