நெகமம் பகுதியில் உள்ள நார் தொழிற்சாலைகளுக்கு வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு
நெகமம் பகுதியில் உள்ள நார் தொழிற்சாலைகளுக்கு வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு
நெகமம்
நெகமம் பகுதியில் உள்ள நார் தொழிற்சாலைகளுக்கு வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகரித்து உள்ளது.
நார் தொழிற்சாலைகள்
நெகமம் மற்றும் அதைசுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இங்கு 300&க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் தேங்காய் பறித்து அதில் இருந்து உரித்த மட்டைகளை பெற்று அதில் இருந்து பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
மட்டைகளில் இருந்து நார் பிரித்தல், உலர வைத்தல், அடுக்குதல், கட்டுகளாக கட்டப்பட்ட மஞ்சியை லாரியில் ஏற்றுதல் உள்பட பல்வேறு வேலைகளுக்கு ஆட்கள் தேவை. ஆனால் பற்றாக்குறை காரணமாக இங்கு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலையில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
வடமாநில தொழிலாளர்கள்
இந்த நிலையில் கொரோனா காரணமாக நெகமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால், அவர்கள் குடும்பம் குடும்பமாக நெகமம் பகுதிக்கு வர தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு வேலை செய்யும் இடத்திலேயே தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து நார் தொழிற்சாலை உரிமையாளர்கள் கூறியதாவது:-
ஒப்பந்த அடிப்படையில் நார் தொழிற்சாலைகளுக்கு உள்ளூரில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக தொழிலாளர்கள் அதிகளவு கூலி கேட்க தொடங்கினர்.
ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை நார் உற்பத்தி வெகு குறைவாகவே இருக்கும். எனவே அதிகபட்ச கூலியை கொடுக்க இயலாத நிலை உள்ளது.
வருகை அதிகரிப்பு
நாள் ஒன்றுக்கு ரூ.200 கூலி கொடுத்தாலும் போதாது என்று உள்ளூர் தொழிலாளர்கள் வேலைக்கு வர மறுக்கின்றனர். எனவே ஒப்பந்த அடிப்படையில் வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி வருகின்றோம். ஒடிசா, மத்தியபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் தொழிலாளர்கள் வேலைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் குடும்பத்துடன் தங்குவதால் நார் தொழிற்சாலைகளில் தொழிலாளர் பற்றாக்குறையும் இல்லை. அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நெகமம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் நெகமத்தில் நடந்த சந்தைக்கு பொருட்கள் வாங்க குவிந்தனர். இதனால் இந்த சந்தையில் பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்தது.
Related Tags :
Next Story