பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி


பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 Sept 2021 10:14 PM IST (Updated: 23 Sept 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பொள்ளாச்சி

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஒத்திகை நிகழ்ச்சி

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையொட்டி மழை, வெள்ள சேதங்களை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருவாய் துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தாசில்தார் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

அப்போது அணையில் சிக்கி ஒருவர் தத்தளிப்பது போன்றும், அவரை தீயணைப்பு துறையினர் ரப்பர் படகில் சென்று பத்திரமாக மீட்டு வருவது போன்றும் தத்துருபமாக நடித்து காண்பித்தனர். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் புருஷோத்தமன் பேரிடர் மீட்பு குறித்து விளக்கி கூறினார். இதில் ஆழியாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை, மண்டல துணை தாசில்தார் வாசுதேவன், வருவாய் ஆய்வாளர் நூர்முகமது மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

முதலுதவி சிகிச்சை

பருவமழை காலங்களில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புகளில் இருப்பது தப்பிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளத்தில் ஒருவர் சிக்கி கொண்டால் பொதுமக்கள் அச்சம் கொள்ள கூடாது. முதலில் கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு அவர்களை மீட்க முயற்சி செய்ய வேண்டும்.

அதாவது காலி குடிநீர் பாட்டில்கள், கேன் உள்ளிட்டவைகளை கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் லைப் ஜாக்கெட் பயன்படுத்தி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, கயிறு கொண்டு மீட்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி மீட்கப்படும் நபர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story