நலிவடைந்து வரும் கைத்தறி நெசவு தொழில்
நெகமம் பகுதியில் கைத்தறி நெசவு தொழில் நலிவடைந்து வருகிறது. இது புத்துயிர் பெற நடவடிக்கை எடுக்க நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நெகமம்
நெகமம் பகுதியில் கைத்தறி நெசவு தொழில் நலிவடைந்து வருகிறது. இது புத்துயிர் பெற நடவடிக்கை எடுக்க நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கைத்தறி நெசவு தொழில்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் கைத்தறி நெசவு தொழில் பிரதானமாக விளங்குகிறது. குறிப்பாக கைத்தறி மற்றும் நூல் சேலை தயாரிப்புக்கு தலைமுறைகளை கடந்தும் நெகமம் பகுதி தான் சிறந்தது என்ற பெயர் நீடித்து வருகிறது. இதில் நெகமம் காட்டன் சேலைகள், சுடிதார் ரகங்கள் அன்று முதல் இன்று வரை கடல் கடந்தும் விற்பனையாகி வருகிறது.
நெகமம் மட்டுமல்லாது அதன் சுற்றுப்பகுதிகளான காட்டம்பட்டி, தாசநாயக்கன்பாளையம், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், காணியாலாம்பாளையம், ஜக்கார்பாளையம், வதம்பச்சேரி, குள்ளக்காபாளையம், குரும்பபாளையம் உள்பட 30&க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இளைஞர்களுக்கு ஆர்வம் இல்லை
ஒரு சேலை நெசவு செய்ய 1 நாள் முதல் 2 நாட்கள் வரை ஆகிறது. வேலைப்பாடுகள் மிகுந்த ரகங்கள் தயாரிக்க 2 நாள் முதல் 3 நாள் வரை ஆகும். இதற்கு ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியம். மேலும் ஒரு சேலை நெசவுக்கு கூலியாக ரூ.600 முதல் ரூ.1,200 வரை பெறுகின்றனர். இவர்கள் தயாரிக்கும் சேலை ரகங்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், தனியார் விற்பனை மையங்கள் மூலம் கொள்முதல் செய்கின்றனர்.
நெகமத்தில் தயாரிக்கப்படும் ‘கோவை காட்டன்‘ ரக சேலைகள் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் அரேபிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. எனினும் இந்த தொழிலில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. கடல் கடந்து நெகமம் காட்டன் சேலைகள் சிறப்பு பெற்றாலும், கைத்தறி நெசவு தொழில் நலிவடைந்து வருகிறது.
சலுகைகள்
இதுகுறித்து நெசவாளர்கள் கூறியதாவது:-
கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சொந்த வீடுகளில் பரம்பரையாக தறிகள் அமைத்து நெசவு செய்கின்றனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இளைஞர்கள் நெசவு தொழிலை மறந்து, பிற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கைத்தறி நெசவு தொழில் நலிவடைந்து உள்ளது. தற்போது கைத்தறி நெசவு தொழிலில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே ஈடுபட்டு உள்ளனர். அவர்களும் கூலி உயர்வு கிடைக்காதது, வயது முதிர்வு ஆகிய காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை கைவிட்டு வருகின்றனர்.
புதிதாக தொழில் கற்றுக்கொள்ள இளைஞர்கள் முன்வராததால், பல வீடுகளில் கைத்தறிகள் இயக்கமின்றி உள்ளன. குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு இல்லாதது, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவை கைத்தறி நெசவு தொழில் நலிவடைய முக்கிய காரணமாக உள்ளது. எனவே தொழில் மீண்டும் புத்துயிர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற தொழில்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், கைத்தறி நெசவாளர்களுக்கும் கிடைத்தால், தலைமுறைகள் கடந்தும் கைத்தறி தொழில் வாழும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story