விபத்துகளை தடுக்க தானியங்கி சிக்னல்

பொள்ளாச்சி, நெகமத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றை முறையாக பராமரிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, நெகமத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றை முறையாக பராமரிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தானியங்கி சிக்னல்
பொள்ளாச்சியில் இருந்து கோவை, பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. இதற்கிடையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல்கள் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் பொள்ளாச்சி நகரில் கோவை ரோடு மகாலிங்கபுரம் ஆர்ச், பல்லடம் ரோட்டில் 5 ரோடுகள் சந்திப்பு மற்றும் நெகமத்தில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்படுகிறது.
இதையொட்டி கம்பங்கள் நடப்பட்டு விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதை தவிர ஒரு வழிப்பாதை, இங்கு வாகனங்களை நிறுத்த கூடாது உள்ளிட்ட அறிவிப்பு பலகைகளும் குறிப்பிட்ட இடங்களில் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பராமரிப்பது இல்லை
இதுகுறித்து போலீசார் கூறும்போது, சாலை பாதுகாப்பு நிதி மூலம் பொள்ளாச்சி நகரில் 2 இடங்களிலும், நெகமத்திலும் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடையும். மேலும் சிக்னல் அமைக்கப்படும் பகுதிகளில் ஒரு நாள் முழுவதும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் அடிப்படையில் சிக்னல்களில் நேரம் செட் செய்யப்படும். இதற்கிடையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன என்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், விபத்துகளை கட்டுப்படுத்த சாலை பாதுகாப்பு நிதி மூலம் சிக்னல்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. ஆனால் சிக்னல்களை அமைப்பதோடு சரி, அதன்பிறகு அவற்றை முறையாக பராமரிப்பது இல்லை. இதன் காரணமாக சாலை பாதுகாப்பு நிதிகள் வீணாகுகிறது. எனவே போலீசார் சிக்னல்கள் தொடர்ந்து செயல்படுகிறதா? என்று ஆய்வு செய்து முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் பழுது ஏற்பட்டால் உடனே சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story