கோவையில் பிஸ்கெட் கவரை வாயில் திணித்து ஒரு வயது குழந்தை கொலை
கோவையில் பிஸ்கெட் கவரை வாயில் திணித்து ஒரு வயது குழந்தை கொலை
கோவை
கோவையில் பிஸ்கெட் கவரை வாயில் திணித்து ஒரு வயது குழந்தையை கொலை செய்த கொடூர பாட்டி கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
டிரைவரின் குழந்தை
கோவை ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் ரோடு பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 29). கால்டாக்சி டிரைவர். இவருக்கு நந்தினி (24) என்ற மனைவியும், துர்கேஷ் (1) உள்பட 2 குழந்தைகளும் இருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நந்தினி, ஒரு வயது குழந்தை துர்கேசை அழைத்துக்கொண்டு கவுலிபிரவுன்ரோடு அன்பகம் வீதியில் உள்ள தன்னுடைய தாய் நாகலட்சுமியின் (50) வீட்டுக்கு வந்தார்.
மூச்சு பேச்சின்றி கிடந்தது
கணவரை பிரிந்ததால், வேலைக்கு செல்ல முடிவு செய்த நந்தினி, அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். தினமும் காலை 8 மணிக்கு வேலைக்கு செல்லும் அவர், இரவு 9 மணிக்குதான் வீட்டுக்கு வருவார். இதனால் குழந்தை துர்கேசை தாயார் நாகலட்சுமியிடம் விட்டுச்செல்வார்.
சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு வேலைமுடிந்து நந்தினி வீட்டுக்கு வந்தார். அப்போது குழந்தை தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருப்பதாக தாய் நாகலட்சுமி கூறினார். குழந்தையை நந்தினிபோய் பார்த்தார். அப்போது துர்கேஷ் எந்தவித அசைவும் இன்றி மூச்சு பேச்சின்றி கிடந்தான். குழந்தையின் உடல் ஜில்லென்று இருந்தது.
பேப்பர் திணித்து கொலை
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், குழந்தையை தூக்கிக்கொண்டு சாய்பாபாகாலனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் நந்தினி கதறிதுடித்தார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, இறந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் கை, கால்கள் உள்பட உடல் முழுவதும் அடித்த சிறு காயங்கள் இருந்தன. மேலும் தொண்டை குழிக்குள் பிஸ்கெட் பேப்பர் திணிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.
கொடூர பாட்டி கைது
இதுதொடர்பாக குழந்தையின் தாயிடம் விசாரித்தபோது, தான் வேலைக்கு செல்வதால் தன்னுடைய தாய்தான் குழந்தையை பார்த்துக்கொள்வார் என்று கூறினார். இதைத்தொடர்ந்து போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன், ஆர்.எஸ்.புரம் இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி ஆகியோர் பாட்டி நாகலட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அப்போது குழந்தையை பாட்டி நாகலட்சுமி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் நாகலட்சுமியை கைது செய்தனர். போலீசில் நாகலட்சுமி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
கவரை வாயில் திணித்தேன்
குழந்தை துர்கேஷ் அதிகளவில் குறும்பு செய்து வந்ததால் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்தேன். சம்பவத்தன்று குழந்தை மலம் கழித்து விட்டு கழிவுகளை குழந்தையின் வாயில் வைத்தது. இதனால் ஆத்திரத்தில் குழந்தையை அடித்தேன்.
மேலும் வீட்டில் கிடந்த காகிதங்களையும் பொறுக்கி தின்றது. பிஸ்கெட் கவரையும் வாயில் வைத்து கடித்தபடி குழந்தை இருந்தது.
குழந்தை இருப்பதால்தானே நமக்கு தொந்தரவு என்று கருதி, பிஸ்கெட் பேப்பரை வாயில் திணித்து விரலால் தொண்டைக்குழிக்குள் தள்ளி விட்டேன்.
சிறிதுநேரத்தில் குழந்தை பேச்சுமூச்சின்றி கிடந்தது. உடனே ஒன்றும் தெரியாதததுபோல் தொட்டிலில் போட்டுவிட்டு தூங்குவதாக கூறினேன். போலீஸ் விசாரணையில் பிடிபட்டுவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் போலீசார் நாகலட்சுமியை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரு வயது குழந்தையை பாட்டியே கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story