குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சரவணம்பட்டி
கொண்டையம்பாளையத்தில் குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி அலுவலகம் முற்றுகை
கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி 9&வது வார்டு பகுதியில் லட்சுமி கார்டன் உள்ளது. இங்கு 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
இது குறித்து பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர்.
பின்னர் அவர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜனிடம் கடும் வாக்குவாதமும் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக ஊராட்சி தலைவர் கோவிந்தராஜன் கூறும்போது, லட்சுமி கார்டன் பகுதியில் புதிதாக அதிக குடியிருப்புகள் வந்து உள்ளன. இதுதான் குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் ஆகும்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளோம். ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
Related Tags :
Next Story