புலி தாக்கி தொழிலாளி பலி


புலி தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 24 Sept 2021 7:17 PM IST (Updated: 24 Sept 2021 7:17 PM IST)
t-max-icont-min-icon

புலி தாக்கி தொழிலாளி பலி

கூடலூர்

தேவர்சோலை அருகே புலி தாக்கி தோட்டத்தொழிலாளி பலியானார். எனவே புலியை பிடிக்கக்கோரி கடையடைப்பு  மற்றும் கூடலூர்& சுல்தான்பத்தேரி சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

கால்நடைகள் மேய்ச்சல்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் புலி நடமாட்டம் காணப்பட்டது. அது கால்நடைகளை கடித்து கொன்றது. இதை கண்டித்தும், புலியை பிடிக்க கோரியும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 

இதைத்தொடர்ந்து அம்பலமூலா பகுதியில் வனத்துறையினர் புலியை பிடிப்பதற்காக கூண்டு வைத்தனர். மேலும் அந்த பகுதியில் பல இடங்களில் தானியங்கி கேமராக்களையும் பொருத்தி உள்ளனர்.

இந்த நிலையில் தேவர்சோலை பேரூராட்சி தேவன் & 1 பகுதியை சேர்ந்த வேலாயுதன் மகன் சந்திரன் (வயது 51).

 இவர் அதே பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று வழக்கம்போல் எஸ்டேட் நிர்வாகத்துக்கு சொந்தமான கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார்.

புலி தாக்கி தொழிலாளி பலி

அப்போது பகல் 11.30 மணிக்கு புதர் மறைவில் இருந்த புலி ஒன்று திடீரென பாய்ந்து சந்திரனின் பின்பக்க தலையில் தாக்கியது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அந்த நேரத்தில் நெலாக்கோட்டை வனவர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சந்திரனின் அலறல் சத்தம் கேட்டு வனத்துறையினர் வாகனத்தை நிறுத்தினர். மேலும் சில தொழிலாளர்களும் அப்பகுதிக்கு ஓடி வந்தனர்.

அங்கு புலி தாக்கியதால் படுகாயமடைந்த சந்திரன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். எனவே அங்கு புலி பதுங்கி இருக்கலாம் என்ற அச்சத்தில் வனத்துறையினர் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் சத்தம் போட்டவாறு சென்று சந்திரனை மீட்டனர். பின்னர் அவரை வனத்துறை வாகனத்தில் ஏற்றி கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

கடையடைப்பு

இதைத்தொடர்ந்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் மனிதர்கள், கால்நடைகளை தாக்கி கொன்று வரும் புலியை சுட்டுக்கொல்ல வேண்டும். உயிரிழந்த சந்திரனின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். 
நஷ்ட ஈடு  வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தேவர்சோலை பேரூராட்சி அலுவலகம் முன்பு பகல் 3 மணிக்கு ஏராளமான பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.
இதன் காரணமாக கூடலூர்& சுல்தான் பத்தேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


இது குறித்து தகவலறிந்த கூடலூர் கோட்ட வன அலுவலர் (பொறுப்பு) போஜலே சச்சின் துக்காராம், ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, நக்சல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ், பேரூராட்சி செயல் அலுவலர் வேணுகோபாலன் உள்பட வருவாய்த்துறையினர், போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

பேச்சுவார்த்தை

அப்போது புலியை சுட்டுக் கொல்லும் வரை போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு கால அவகாசம் ஆகும் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதைத்தொடர்ந்து உயிரிழந்த சந்திரனின் உருவப் படத்தை வைத்து பொதுமக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியவாறு இருந்தனர். இதனிடையே புலியை பிடிப்பதற்காக தேவன்&1 பகுதியில் 2 இரும்பு கூண்டுகளை வனத்துறையினர் மாலை 5 மணிக்கு வைத்தனர். 

மேலும் அப்பகுதியில் கேமராக்கள் பொருத்தும் பணியிலும் ஈடுபட்டனர். மாலை 6 மணி வரை பொதுமக்களின் பிரதிநிதிகளிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Next Story