மனோஜ், ஜாமீன் நிபந்தனையில் மீண்டும் தளர்வு


மனோஜ், ஜாமீன் நிபந்தனையில் மீண்டும் தளர்வு
x
தினத்தந்தி 24 Sept 2021 7:20 PM IST (Updated: 24 Sept 2021 7:20 PM IST)
t-max-icont-min-icon

மனோஜ், ஜாமீன் நிபந்தனையில் மீண்டும் தளர்வு

ஊட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிறையில் உள்ள மனோஜ், ஜாமீன் நிபந்தனையில் மீண்டும் தளர்வு அளித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்&அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017&ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. 

இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். சயான், திபு, சம்சீர் அலி, ஜித்தின்ஜாய், சதீசன், உதயகுமார், மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி, பிஜின் ஆகிய 9 பேர் ஜாமீனில் இருக்கின்றனர்.

ஊட்டி கோர்ட்டு மனோஜூக்கு கடந்த 16.07.2021&ந் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி 2 நபர்கள் பிணை தர வேண்டும். இருவரும் கோவை அல்லது நீலகிரி மாவட்டத்தில் குடியிருக்க வேண்டும். 

ரூ.50 ஆயிரம் சொத்துக்கான ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. மனோஜ் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஜாமீன் தர நபர்கள் இல்லை. 

இதனால் அவர் குன்னூர் சிறையில் உள்ளார். ஊட்டி கோர்ட்டில் மனோஜ் தரப்பில் வக்கீல் ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

நிபந்தனையில் மீண்டும் தளர்வு

கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா, கேரளா மாநிலத்தை சேர்ந்த மனோஜின் ரத்த உறவினர்கள் பிணை தரலாம் என்று நிபந்தனையில் தளர்வு அளித்து உத்தரவிட்டார். 

அதன்படி மனோஜின் மனைவி மற்றும் உறவினர் ஒருவர் பிணை தர உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. மனோஜின் ஜாமீன் உத்தரவில் உள்ள நிபந்தனைகளை மீண்டும் தளர்த்தக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனோஜூக்கு ஜாமீனில் தளர்வு அளிக்கக்கூடாது என்று அரசு தரப்பில் ஆட்சேபனை தெரி விக்கப்பட்டது. ஆனாலும், மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா, மனோஜின் மனைவியுடன், அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் பிணையாளராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை ஜாமீனில் தளர்வு அளித்து உத்தரவிட்டார். மனோஜ் தரப்பில் வக்கீல் முனிரத்தினம் ஆஜரானார்.




கோடநாடு ஊழியர்கள் 2 பேரிடம் விசாரணை

கோடநாடு வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் புதிய நபர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். ஜாமீனில் உள்ள சயான், சம்சீர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, சதீசன், பிஜின் ஆகிய 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று ஊட்டி பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் பணிபுரியும் 2 ஊழியர்களிடம் விசாரணை நடந்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தி பதிவு செய்தனர். 

3 மணி நேரம் நடந்த விசாரணையில் தற்கொலை செய்த தினேஷ்குமார் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார், அவருக்கு வேறு ஏதேனும் அழுத்தம் இருந்ததா என கேள்விகளை எழுப்பி பதிவு செய்துகொண்டனர். 

நேற்று திபு, ஜித்தின் ஜாய் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடைபெறுவதாக இருந்தது. திபு உடல்நிலை சரியில்லாததால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஜித்தின் ஜாய் சகோதரிக்கு கொரோனா பாதித்து உள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதனால் அவர் விசாரணைக்கு வரவில்லை.


1 More update

Next Story