வனத்துறையினர் 2 வது நாளாக வேலை நிறுத்தம்
வனத்துறையினர் 2 வது நாளாக வேலை நிறுத்தம்
பொள்ளாச்சி
வால்பாறை வனச்சரக அதிகாரியை கைது செய்ததை கண்டித்து வனத்துறையினர் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வனச்சரக அதிகாரி கைது
வால்பாறை வனச்சரகம் சிறுகுன்றாவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தங்கும் விடுதியில் 22-ந்தேதி இரவில் சிலர் தங்கி இருந்தனர். இதற்கிடையில் இரவு நேரத்தில் அவர்கள் தங்கும் விடுதியை விட்டு வெளியே நின்றதாக தெரிகிறது.
இதையடுத்து அங்கு வந்த வனச்சரக அதிகாரி ஜெயச்சந்திரன் அவர்களை விடுதிக்குள் செல்லுமாறு கூறினார். இதனால் வனச்சரக அதிகாரிக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது வனச்சரகர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வால்பாறை கோர்ட்டு தலைமை எழுத்தர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2-வது நாள் வேலை நிறுத்தம்
இந்த சம்பவத்தை கண்டித்து ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, திருப்பூர் வனகோட்டத்தில் பணிபுரியும் வனச்சரகர், வனவர், வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட 300 பேர் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பொள்ளாச்சியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு வன அலுவலர் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கேட்கப்பட்டன. இதை தொடர்ந்து மாநில தலைவர் சிவபிரகாசம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அரசாணையை பின்பற்றவில்லை
வனச்சரக அதிகாரி ஜெயச்சந்திரன் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்த போலீசாரை கண்டிக்கிறோம். வனப்பகுதியையும், வனவிலங்கு களையும் பாதுகாப்பது தான் நமது பணி. எனவே தங்கும் விடுதிகளுக்கு வரும் நபர்களுக்கு சமையல் செய்து கொடுப்பது, பாதுகாப்பு வழங்குவது நமது வேலை இல்லை.
பணியில் இல்லாத இரவு நேரத்தில் மது அருந்துவது என்பது அவரது தனிப்பட்ட விஷயமாகும். போலீசார், வனத்துறை ஆகிய துறை சார்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும்போது இரு தரப்பு உயர் அதிகாரிகளும் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்ற அரசாணை உள்ளது. ஆனால் அந்த அரசாணையை போலீசார் பின்பற்றவில்லை.
காலவரையற்ற போராட்டம்
இந்த சம்பவம் தொடர்பாக சேலத்தில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். பொய் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அனைத்து தங்கும் விடுதிகளையும் மூட வேண்டும். வழக்குப்பதிவை ரத்து செய்து, வனச்சரகரை மீண்டும் அதே இடத்தில் பணி அமர்த்த வேண்டும்.
புகார் கொடுத்த தலைமை எழுத்தரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு டி.ஜி.பி., தலைமை நீதிபதி, முதல்-அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும் வனச்சரகர் மீதான வழக்கை ரத்து செய்து, அவரை விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கூட்டத்தில் பொள்ளாச்சி, உடுமலை கிளை தலைவர் மணிகண்டன், வனச்சரக அதிகாரிகள் காசிலிங்கம், புகழேந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story