வால்பாறையில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு


வால்பாறையில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 24 Sept 2021 11:34 PM IST (Updated: 24 Sept 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு


வால்பாறை

வால்பாறையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சப்-கலெக்டர் ஆய்வு செய்தார். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை  மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை முன்னிட்டு வால்பாறை நகராட்சி சார்பில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்புகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. 

மேலும் மழை காலங்களில் குடியிருப்பு பகுதிக்கு வரக்கூடிய மழைத் தண்ணீர் ஆறுகளில் சென்று சேரும் வடிகால்களையும், அதில் உள்ள புதர்களை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதுதவிர பொதுமக்கள் நடைபாதையில் படிந்து இருக்கும் பாசிகளையும் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 

சப்-கலெக்டர் ஆய்வு 

இந்த நிலையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நேற்று திடீரென்று வால்பாறைக்கு வந்தார். பின்னர் கூட்டுறவு காலனி, காமராஜ்நகர், துளசிங்நகர் ஆகிய பகுதியில் துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்டு வரும் பணிகளை பார்வையிட்டார். 

கடந்த காலங்களில் பருவமழை காலத்தில் மழைத் தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்பட்டிருந்த இடங்களையும் கண்டறிந்து, அங்கு தடையின்றி செல்ல ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார். 

அதுபோன்று பருவமழை காலத்திலும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதியில் உள்ள நீர்வழி பாதைகளை பார்வையிட்டு முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், துப்புரவு அதிகாரி செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 


Next Story