தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்கக்கோரி வழக்கு


தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்கக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 25 Sept 2021 2:48 AM IST (Updated: 25 Sept 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்கக்கோரிய வழக்கில் மத்திய&மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்கக்கோரிய வழக்கில் மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
நவோதயா பள்ளிகள்
மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த வக்கீல் முகமது ரஸ்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:&
மத்திய அரசின் மகத்தான திட்டங்களில் ஜவகர் நவோதயா வித்யாலயா திட்டமும் ஒன்று. கிராமப்புற ஏழை மாணவர்கள் சிறந்த கல்வியை கற்கும் சூழலை ஏற்படுத்துவது தான் இதன் நோக்கம். நாடு முழுவதும் 638 மாவட்டங்களில் 661 நவோதயா வித்யாலயா பள்ளிகள் திறக்கப்பட்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், ஆதிதிராவிட, பழங்குடியின, சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.
உண்டு உறைவிட பள்ளியான இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் என அனைத்தும் இலவசமாக அளிக்கப்படுகிறது. 9&ம் வகுப்பில் இருந்து 12&ம் வகுப்பு வரை ஆண்டு கட்டணமாக ரூ.200 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இந்த பள்ளிகள் கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மற்ற அனைத்து மாநிலங்களிலும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
வசதிகள் செய்துதர வேண்டும்
இந்த பள்ளிகளை தமிழகத்தில் நிறுவ அனுமதிக்காமலும், இடவசதிகள், சட்ட ரீதியான அனுமதியை கொடுக்கமலும் உள்ளனர். பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுத்தரப்படுகிறது. ஆனால் இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் கல்வியை வியாபாரமாக்கி வரும் அரசியல்வாதிகள்தான் நவோதயா பள்ளிகளை இங்கு வரவிடாமல் தடுக்கின்றனர். 
எனவே நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசிடம் அளிக்கவும், அந்த பள்ளிகளுக்கான இதர வசதிகளையும் செய்து தரவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பதில் அளிக்க உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, மனுதாரர் கோரிக்கையானது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கை தொடர்ந்துள்ளார், என்றார்.
அதற்கு மனுதாரர் வக்கீல்கள் ஆஜராகி, ஒவ்வொரு நவோதயா பள்ளிக்கும் ரூ.20 கோடியை மத்திய அரசு ஒதுக்குகிறது. அதற்கான வசதிகளை மட்டும் மாநில அரசு செய்தால், ஏராளமான ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தனர்.
விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய&;மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 8 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Next Story