மதுரை, வாடிப்பட்டியில் பலத்த மழை


மதுரை, வாடிப்பட்டியில் பலத்த மழை
x
தினத்தந்தி 25 Sept 2021 2:48 AM IST (Updated: 25 Sept 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

மதுரை, வாடிப்பட்டியில் நேற்று இரவு 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

மதுரை
மதுரை, வாடிப்பட்டியில் நேற்று இரவு 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது.
2 மணி நேரம் மழை
மதுரையில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதனால் மதுரை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் பகல் நேரங்களில் மதுரையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.
நேற்று மாலையில் திடீரென கருமேகங்கள் ஒன்று திரண்டு மழைக்கான அறிகுறியை வெளிப்படுத்தியது. பின்னர் மாலை 6.30 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதுபோல் நகரின் ரெயில்வே நிலையம் முன்பு, மேலவெளி வீதி உள்பட பல முக்கிய வீதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்ற காட்சிகளை காணமுடிந்தது. இரவு நேரம் என்பதால் அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
மதுரை பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் மழையால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. குறிப்பிட்ட சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பகுதியில் நேற்று மாலை 3 மணி வரை வெயில் கொளுத்தியது. அதன் பின் 4 மணிக்கு திடீரென்று மேகங்கள் திரண்டு வந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த மழையினால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவ&மாணவிகள் நனைந்தபடி வந்து பஸ் ஏறி சென்றனர். மேலும் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. 
வாடிப்பட்டி, தாதம்பட்டி, நீரேத்தான், மேட்டுநீரேத்தான், போடிநாயக்கன்பட்டி, குலசேகரன்கோட்டை, விராலிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி கச்சைகட்டி, ராமையன்பட்டி, பூச்சம்பட்டி, ஆண்டிபட்டி, கட்டக்குளம், வடுகபட்டி, அய்யங்கோட்டை, சமயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் மழை கொட்டித் தீர்த்தது. அதன்பின் இரவு 10 மணிவரை சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.

Next Story