புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Sep 2021 9:22 PM GMT (Updated: 24 Sep 2021 9:22 PM GMT)

புகார் பெட்டி

புகார் பெட்டி
சாக்கடை கால்வாய் வேண்டும் 
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அனுப்பபட்டி கிராமத்தில் பள்ளி வளாகம் முன்பு சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இங்கு சாக்கடை கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
வேல், பேரையூர். (படம்) 
========== 
உடைந்த சாக்கடை கால்வாய் 
விருதுநகர் மாவட்டம் அனுப்பன்குளம் பஞ்சாயத்து மினம்பட்டியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாக்கடை கால்வாயில் கடந்த சில மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. மேலும் ஆங்காங்கே குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகமாக காணப்படுகிறது. எனவே, உடைந்த சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும். 
ராஜன், அனுப்பன்குளம். 
=========== 
சாலைகளில் சுற்றும் மாடுகள் 
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி அலுவலக கட்டிடத்திற்கு பின்பகுதியில் அமைந்துள்ள சர்வீஸ் சாலையில் மாடுகள் சுற்றி திரிகின்றன. மேலும், அந்த மாடுகள் சாலையை ஆக்கிரமித்து படுத்து கொள்கின்றன. இதனால், வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. தினமும் விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளன. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இனியாவது சாலையில் மாடுகள் சுற்றி திரியாமல் இருக்க சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?  
சேசு ஆல்பர்ட், பரமக்குடி.
============= 
நாய்கள் தொல்லை 
மதுரை மாவட்டம் புதூரை அடுத்துள்ள அழகர்நகர் 5&வது தெரு பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனர். தெருவில் செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் நாய்கள் கடித்து வருகின்றன. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லவே அச்சம் அடைகின்றனர். பொதுமக்கள் நலன்கருதி தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 
தாத்தப்பன், அழகர்நகர். 
=========== 
சாலை வசதி தேவை 
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நேதாஜி நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் தெருக்களில் மழைநீருடன், சாக்கடை கழிவும் கலந்து வெள்ளம் போல் செல்கிறது. இது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மழை காலங்களில் சாலை சேறும், சகதியாக இருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். 
பொதுமக்கள், நேதாஜிநகர். 
============= 
குவிந்து கிடக்கும் குப்பைகள் 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் 95&வது வார்டு மேலரத வீதியில் சிலர் குப்பைகளை குப்பை தொட்டியில் கொட்டாமல் சாலையோரத்தில் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொன்முத்து, திருப்பரங்குன்றம். (படம்) 
============ 
சுகாதார சீர்கேடு
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கீழராஜகுலராமன் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஊர் தெப்பகுளத்தில் கழிவுநீர் கலந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன் அருகில் 3 குடிநீர் தொட்டி உள்ளது. இதனால், கழிவுநீர், குடிநீர் தொட்டியில் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதனை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு நோய் தொற்றும் பரவி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
தீனா, கீழராஜகுலராமன்.
==============
தார்சாலை அமைப்பார்களா? 
மதுரை மாவட்டம் மேலூர் வட்டாச்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவு வாயிலில் உள்ள சாலை மண் சாலையாக இருக்கிறது. மேடு,  பள்ளமாக இருப்பதால் மழை காலங்களில் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமம் உள்ளது. எனவே இந்த இடத்தில் தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், மேலூர். 

Next Story