மாற்றுத்திறனாளி என்ஜினீயர் சாதனை


மாற்றுத்திறனாளி என்ஜினீயர் சாதனை
x
மாற்றுத்திறனாளி என்ஜினீயர் சாதனை
தினத்தந்தி 25 Sept 2021 10:12 PM IST (Updated: 25 Sept 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி என்ஜினீயர் சாதனை

கோவை

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் 2020-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந் தேதி நடைபெற்றது.


இறுதியாக நேர்முக தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இந்த தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. அதில் கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி என்ஜினீயர் ரஞ்சித் உள்பட 3 பேர் வெற்றி பெற்று உள்ளனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு:-


கோவை சித்ரா சவுடாம்பிகாநகரை சேர்ந்தவர் தர்மலிங்கம். ஓய்வு பெற்ற ஆவின் நிறுவன அதிகாரி. இவருடைய மனைவி அமிர்தவல்லி. தனியார் பள்ளி தலைமை ஆசிரியை. இவர்களுக்கு அருண்பிரசாத், ரஞ்சித் (வயது 27) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் அருண்பிரசாத் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை டாக்டர் ஆவார். ரஞ்சித் காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி இருந்தார். 

தேர்வு முடிவில் வெற்றி பெற்று  தேசிய அளவில் 750-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.
இதுகுறித்து ரஞ்சித்தின் தாய் அமிர்தவல்லியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எங்கள் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் சேரூர் ஆகும். எனது இளைய மகன் ரஞ்சித்துக்கு பிறவியிலேயே காது கேட்காது, வாய்பேச முடியாது. இதனால் நாங்கள் அவனை கோவை அழைத்து வந்து சிறப்பு பள்ளியில் படிக்க வைத்தோம். அவனும் நன்றாக படித்தான். தொடர்ந்து கோவை கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தான். அவன் சிறுவயதில் இருந்தே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்று சைகையில் பேசிக்கொண்டே இருப்பான். அவனின் கனவு தற்போது நிறைவேறி உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

அதிகாரியாகி மக்களுக்காக நேர்மையாக உழைப்பேன் என்று கூறுகிறான். இவனுக்கு காதும் கேட்கவில்லை, பேச்சும் வரவில்லை என்று நான் பட்ட கஷ்டங்களுக்கு இப்போது தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் எனக்கு கஷ்டங்கள் பனிபோல் கரைந்து போனது. மேலும் தமிழக முதல்&அமைச்சர் எனது மகனை வாழ்த்தியது வானளாவிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று உள்ள மாற்றுத்திறனாளி என்ஜினீயர் ரஞ்சித்துக்கு தமிழக முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். வாழ்த்து செய்தியை முதல்&அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.


இதுபோன்று சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த கோவை கணுவாய் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் சர்மா என்பவரின் மகன் வி.எஸ்.நாராயண சர்மா என்பவர் தேசிய அளவில் 33-வது இடத்தை பிடித்து தமிழக அளவில் முதலிடத்தில் சாதனை படைத்துள்ளார். இவர் 3-வது முறையாக இந்த தேர்வை எழுதி வெற்றிவாகை சூடி உள்ளார்.

இவரை போன்று அதே மையத்தில் கோவையை சேர்ந்த சுவாதிஸ்ரீ என்பவர் 126-வது இடத்தை பிடித்து சாதனை படைத்து உள்ளார். வெற்றி பெற்றவர்களுக்கு மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்தார்.


Next Story