தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 Sept 2021 12:55 AM IST (Updated: 26 Sept 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


அசுத்தம் செய்யும் கால்நடைகள்

வால்பாறை நகரில் கால்நடைகள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை ரேஷன் கடை வளாகத்தில் முகாமிட்டு அசுத்தம் செய்துவிடுகின்றன. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க வருபவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கால்நடைகளை தேடி சிறுத்தைப்புலிகள் ஊருக்குள் வருகின்றன. எனவே கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜூ, வாழைத்தோட்டம், வால்பாறை.

குப்பைகளை அகற்றலாமே...!

ஊட்டி அருகே தூனேரியில் இருந்து அகலார் செல்லும் சாலையோரத்தில் வீணான பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு இருக்கிறது. அதன் அருகே உள்ள கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குப்பைகள் குவிந்து கிடப்பதால், அங்கு கடும் தூர்நாற்றம் வீசுகிறது. அதில் உள்ள உணவு கழிவுகளை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருகின்றன. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.

ஐஸ்வர்யா, அகலார், ஊட்டி.

காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

ஊட்டி கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக அவை அங்கிருந்து பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகம், பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் சுற்றித்திரிகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள், நடந்து போகிறவர்களை துரத்துகிறது. இதனால் விபத்து ஏற்பட்டு காயம் ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே காட்டுப்பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.

பிரபு, ஆர்.கே.புரம், ஊட்டி.

தெருநாய்கள் தொல்லை தாங்க முடியலீங்க...!

கோவை உக்கடத்தில் இருந்து குனியமுத்தூர் செல்லும் வழியில் எப்போது வரும்?, எங்கிருந்து வரும் என்பது தெரியாமல் திடீரென தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சாலைகளில் வருகின்றன. இதனால் தெருநாய்கள் தொல்லை தாங்க முடியலீங்க என்கிற நிலை காணப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. குனியமுத்தூர் பகுதி மட்டுமின்றி கோவைப்புதூர் பகுதியிலும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அங்குள்ள பெருமாள் கோவில் பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.கே.பாலசுப்பிரமணியம், குனியமுத்தூர்.

ஆபத்தான குழிகள்

கோவை உக்கடம் குளக்கரை வழியாக பேரூர் செல்லும் சாலையில் தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக கேரளாவுக்கு செல்லும் லாரிகள் அதிகளவில் செல்கின்றன. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளக்கரை அழகுபடுத்தப்பட்டு உள்ளதால் தினமும் மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் பொழுதுபோக்குவதற்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அந்த சாலை பல இடங்களில் ஆபத்தான குழிகள் காணப்படுகின்றன. இதனால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக அந்த குழிகளில் விழுந்து விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. ஆகவே அந்த சாலையை பழுது நீக்கி, சீரமைக்க வேண்டும்.

அசரியா, கோவைப்புதூர்.

போக்குவரத்து நெரிசல்

கோத்தகிரி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் மீன்கள் மற்றும் காய்கறிகளை காலை முதல் இரவு வரை தாசில்தார் அலுவலக நுழைவு வாயில் முன்பு வாகனங்களை நிறுத்தி இறக்கி வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கோர்ட்டு, தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் உயர் திகாரிகள் மற்றும் பொதுமக்கள் சிராமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இதை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஸ்கரன், கோத்தகிரி.

புதிய மூடி அமைக்கலாமே...!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூரில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் சரிசெய்ய ஆள் இறங்கும் குழி உள்ளது. இதன் மூடி பழுதடைந்ததால், அந்த இடத்தில் பள்ளம் போன்று உள்ளது. இதை மறைக்க அதன் மீது இரும்பு தடுப்பானை வைத்து உள்ளனர். எனவே மூடி அமைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், கணபதி.

குண்டும், குழியுமான சாலை

கோவை திருச்சி ரோடு ரெயின்போ பகுதியில் இருந்து மேம்பாலம் ஏறும் பகுதியில் இருபுறமும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. ஏற்கனவே மேம்பால பணியால் இந்த குறுகிய சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமத்துடன் செல்கின்றன. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

சார்லஸ், ரேஸ்கோர்ஸ்.

சுகாதார சீர்கேடு

கோவை 27-வது வார்டு சின்னவேடம்பட்டி குப்புசாமி நகரில் குடியிருப்பு பகுதியில் குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. அங்கு குப்பைகள் அகற்றப்படுவதில்லை. மேலும் பொது கழிவறையும் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

கலைசெல்வி, சின்னவேடம்பட்டி.

கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

சூளேஸ்வரன்பட்டி 10-வது வார்டு ஸ்ரீசக்தி விநாயகர் லே அவுட் ஏர்பதி பகுதியில் 20 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். இதனால் சாலைகளில் கழிவுநீர் செல்கிறது. அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மஜீத், சூளேஸ்வரன்பட்டி.

மரக்கிளைகளில் உரசும் மின்கம்பிகள்

கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தாசில்தார், ஆர்.டி.ஓ. குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் மரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. இதில் உள்ள மரக்கிளைகளை உரசியபடி மின்கம்பிகள் செல்கிறது. இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.
 
மூர்த்தி, கூடலூர்.

Next Story