புதிய பஸ்கள் இயக்கப்படுமா?


புதிய பஸ்கள் இயக்கப்படுமா?
x
தினத்தந்தி 26 Sept 2021 12:55 AM IST (Updated: 26 Sept 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை பகுதியில் புதிய பஸ்கள் இயக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

வால்பாறை

வால்பாறை பகுதியில் புதிய பஸ்கள் இயக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள்

வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியை சேர்ந்த பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் வால்பாறை கிளை பணிமனையில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து எஸ்டேட் பகுதிகள் மற்றும் பொள்ளாச்சி, கோவை, பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது பணிமனையில் உள்ள 42 பஸ்களில் 36 பஸ்கள் இயக்கப்படுகிறது. மீதமுள்ள 6 பஸ்கள் அவசர தேவைக்கு பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் வால்பாறையில் இயக்கப்பட்டு வரும் 36 பஸ்களில் 8 பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வால்பாறையில் இருந்து சேக்கல்முடி, புதுக்காடு ஆகிய எஸ்டேட் பகுதிக்கு செல்லும் பஸ்கள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடுகின்றன.

தண்ணீர் வழிந்தோடுகிறது

இது தவிர மேற்கூரைகள் சேதம் அடைந்து உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் பஸ்களுக்குள் வழிந்தோடுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மலைப்பிரதேசமான வால்பாறை பகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்தி புதிய அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தொடர்ந்து ஒரு சில வழித்தடங்களில் பழைய பஸ்களே இயக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் நேற்று மதியம் புதுக்காடு எஸ்டேட் பகுதிக்கு சென்று விட்டு வால்பாறைக்கு வந்த அரசு பஸ் காந்திசிலை பஸ்நிறுத்தம் பகுதியில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் பணிமனைக்கு செல்ல இயக்கப்பட்டபோது பழுதடைந்து நின்றது. டிரைவர் எவ்வளவோ முயற்சித்தும் பஸ்சை இயக்க முடியவில்லை. வேறு வழியின்றி பஸ்சின் நடத்துனர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிலர் இணைந்து பஸ்சை தள்ளி இயங்க வைத்தனர். அதன்பிறகு பஸ் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே வால்பாறை பணிமனைக்கு பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story