3 தென்னை நார் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை மீறியதால் 3 தென்னை நார் தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
நெகமம்
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை மீறியதால் 3 தென்னை நார் தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அமைச்சரிடம் புகார்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டம்பட்டி ஊராட்சியில் ஏராளமான தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தொழிற்சாலைகள் நிலத்தடி நீரை அதிகளவில் பயன்படுத்துவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபட்டு வருவதாகவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோரிடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி காட்டம்பட்டியில் செயல்பட்டு வரும் 3 தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் வழங்கி, அங்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
மின் இணைப்பு துண்டிப்பு
அப்போது அந்த தொழிற்சாலைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
தென்னை நார் தொழிற்சாலைகள் குறைந்த அளவில் மாசு ஏற்படுத்தும் வெள்ளை வகைப்பாட்டில்தான் உள்ளது. ஆனாலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை மீறினால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி காட்டம்பட்டியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் வழங்கி, விதிமுறைகளை கடைபிடிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து விதிமுறைகளை மீறி அந்த தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தது. இதனால் அந்த தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story