‘ஆட்சிக்கு வந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ - எடப்பாடி பழனிசாமி பேச்சு
‘ஆட்சிக்கு வந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் தி.மு.க. வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை’ என காஞ்சீபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் காஞ்சீபுரம் அருகே செவிலிமேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் எனவும், மாதந்தோறும் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தரப்படும் எனவும் வாக்குறுதி அளித்தது. இதுவரை தரவில்லை. கல்விக்கடனையும், கூட்டுறவு வங்கிகளிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் 5 சவரனுக்கு கீழே உள்ள அடமான நகைக்கடன்கள் அனைத்தையும் ரத்து செய்வோம் என்றார்கள். அதையும் செய்யவில்லை.
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும் சொன்னார்கள். அதையும் இதுவரை செய்யவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றார்கள். ஆட்சிக்கு வந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை முக்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால் மக்கள் அந்த கட்சியை நம்பத் தயாராக இல்லை. எனவே உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. குறுக்கு வழியில் வெற்றி பெற நினைக்கும்.
உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வினர் வாக்குப்பதிவின் போதும், வாக்கு எண்ணும் போதும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் தி.மு.க.வினர் வாக்குப்பெட்டியை மாற்றினாலும் மாற்றி விடுவார்கள். அ.தி.மு.க.வினர் அனைவரும் பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற வேண்டும், அ.தி.மு.க. பொறுப்பாளர்கள், களத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களும் வெற்றிப்பெற இரவு, பகலாக தேர்தல் பணிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.கோகுல இந்திரா, காமராஜ், பெஞ்சமின், மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கலந்து பேசியபோது, தான் முதல்-அமைச்சராக இருந்தபோது புதிய மாவட்டமாக செங்கல்பட்டு உருவாக்கப்பட்டது. மருத்துவ இடங்களில் 7.5 உள் ஒதுக்கீடு கொண்டுவந்து அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கி 435 மாணவர்கள் அதன் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.
கடந்த கால தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. ஆகவே அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளாட்சித் தேர்தலில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 100 சதவீதம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பேசினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, மா.பா. பாண்டியராஜன், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story