அட்டகட்டியில் ஆர்க்கிட்டோரியம் மலர்செடிகள் அரங்கம்


அட்டகட்டியில் ஆர்க்கிட்டோரியம் மலர்செடிகள் அரங்கம்
x
தினத்தந்தி 26 Sept 2021 8:22 PM IST (Updated: 26 Sept 2021 8:22 PM IST)
t-max-icont-min-icon

வனக்கல்வி ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் அட்டகட்டியில் ஆர்க்கிட்டோரியம் மலர்செடிகள் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிக்ள தெரிவித்தனர்.

பொள்ளாச்சி

வனக்கல்வி ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் அட்டகட்டியில் ஆர்க்கிட்டோரியம் மலர்செடிகள் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிக்ள தெரிவித்தனர்.

ஆர்க்கிட்டோரியம் மலர் செடிகள்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் மட்டுமல்லாது அரிய வகை தாவர இனங்களும் உள்ளன. புலிகள் காப்பகத்தில் புல்வெளிகள், மழைக்காடுகள், சோலைக்காடுகள், வெப்ப மண்டல காடுகள், பசுமை மாறா காடுகள், இலையுதிர் காடுகள், வறண்ட முட்புதர்காடுகள் என பல்வேறு வகையான வனப்பகுதிகள் உள்ளன. இந்த நிலையில் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலா பயணிகளும் பல வண்ண தாரவங்களை ஒரே இடத்தில் பார்த்து ரசிக்கும் வகையில் வால்பாறை மலைப்பாதையில் அட்டகட்டியில் ஆர்க்கிட்டோரியம் மலர்செடிகள் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு அறிவியல் ரீதியான பல வண்ண தாவரங்கள் உள்ளதால் சுற்றுலா பயணிகளை இந்த அரங்கம் வெகுவாக கவர்கிறது. மேலும் உணவு சங்கிலியை மேம்படுத்தும் முயற்சியாக இந்த அரங்கத்தின் பின்புறம் வனப்பகுதியில் கடமான், புள்ளி மான், காட்டெருமை போன்ற விலங்குகள் எந்த வகையான புற்களை அதிகமாக சாப்பிடுகின்றன என்கிற ஆராய்ச்சிக்காக புல் வகைகள் வளர்க்கப்படுகிறன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பாதுகாக்க நடவடிக்கை

வனப்பகுதிகளில் 146 வகையான ஆர்க்கிட் மலர்கள் உள்ளன. இதில் 68 மலர்கள் அழியும் நிலையில் உள்ளன. அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி அட்டகட்டியில் ஆர்க்கிட்டோரியம் மலர் செடிகள் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 62 வகையான மலர்செடிகள் வைக்கப்பட்டு உள்ளன. வனப்பகுதியை போன்ற சீதோஷ்ண நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக தானியங்கி எந்திரம் பொருத்தி, தாவரங்களுக்கு தேவையான நீர், ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது.
இவை தட்பவெப்பநிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும். உட்பகுதி குளிர்ந்த நிலையில் உள்ளது. ஒவ்வொரு மலர்செடியும், ஒவ்வொரு பருவத்துக்கு ஏற்ப பூக்கும் தன்மை கொண்டது. இந்த அரங்கம் வனக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளும் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும் அரங்கத்தில் மலர் செடிகள் குறித்த புகைப்படத்துடன் கூடிய தகவல்களுடன் கூடிய மையம் அமைக்கப்பட்டு உள்ளது. சில வகையான ஆர்க்கிட் செடிகளை பழங்குடியின மக்கள் பாராம்பரிய மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story