கடைகள், பூங்காக்கள் திறக்கப்பட்டன.


கடைகள், பூங்காக்கள் திறக்கப்பட்டன.
x
கடைகள், பூங்காக்கள் திறக்கப்பட்டன.
தினத்தந்தி 26 Sept 2021 9:05 PM IST (Updated: 26 Sept 2021 9:05 PM IST)
t-max-icont-min-icon

கடைகள் பூங்காக்கள் திறக்கப்பட்டன.

கோவை

கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, நேற்று மீண்டும் கடைகள், பூங்காக்கள் திறக்கப்பட்டன. ஒப்பணக்கார வீதியில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊரடங்கில் தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்தில் கடந்த 17-ந் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன்படி அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி, மளிகை கடைகள் தவிர மற்ற கடைகள் மற்றும் சந்தைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டது.

இதேபோல் பன்னடுக்கு வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தளங்களும் ஞாயிற்றுக்கிழமை மூட உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே கொரோனா காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை கடைகள் மூட உத்தரவிட்டதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 80 சதவீதம் பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், சுமார் 30 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 43 சதவீதத்தில் இருந்து தற்போது 70 சதவீதம் பொதுமக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இந்த தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.

இதன்படி நேற்று காலை முதல் காந்திபுரம், ஒப்பணக்கார வீதி மற்றும் பெரிய கடை வீதிகளில் பொதுமக்கள் திரளாக குவிந்தனர். அப்போது தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர். பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் குவிந்ததால் ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை ஒழுங்குபடுத்தினர்.

இதேபோல் கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவும் நேற்று திறக்கப்பட்டது. வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ள குடும்பத்துடன் வந்த மக்கள் பூங்காவிற்கும் சென்று அங்கிருந்த பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து ரசித்தனர். இதனால் பூங்கா களை கட்டியது.

1 More update

Next Story