மாவட்டம் முழுவதும் சாலை மறியல்; 1500 பேர் கைது


மாவட்டம் முழுவதும் சாலை மறியல்; 1500 பேர் கைது
x
தினத்தந்தி 27 Sep 2021 9:07 PM GMT (Updated: 27 Sep 2021 9:07 PM GMT)

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி மதுரை மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 1500 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி மதுரை மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 1500 பேர் கைது செய்யப்பட்டனர். 
ரெயில் நிலையம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் 27-ந் தேதி பாரத் பந்த் நடத்துவதற்கு விவசாயிகளின் கூட்டமைப்பான சம்யுக்த் கி‌ஷான் மோர்ச்சா அழைப்பு விடுத்தது. இதற்கு அனைத்து எதிர்கட்சிகள், தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்தன. தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மதுரையில் விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு, தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மதுரை ரெயில் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள் பாதர்வெள்ளை, நந்தாசிங், கருணாநிதி, அல்போன்ஸ், தெய்வராஜ், ராஜசேகரன், மகபூப்ஜான் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை பகுதியில் கூடினார்கள். பின்னர் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌‌ஷம் போட்டு கொண்டு ரெயில்நிலையம் நோக்கி வந்தனர். அவர்களை ரெயில்நிலையம் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். இதில் போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 398 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறியல்
அதேபோன்று தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வெங்கடேசன் எம்.பி., கம்யூனிஸ்டு விஜயராஜன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், ம.தி.மு.க. மகபூப்ஜான், விடுதலைசிறுத்தைகள் கட்சி கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது மறியலில் ஈடுபட்ட சுமார் 285 பேரை போலீசார் கைது செய்தனர். மறியலையொட்டி பெரியார் பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மதுரை தலைமை தபால் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தெற்குவாசல் பகுதியில் தெற்கு மாவட்ட தலைவர் சீமான்சிக்கந்தர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோ‌‌ஷம் எழுப்பினார்கள். அவர்களை போலீசார்  கலைந்து செல்லுமாறு கூறினார்கள். மேலும் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தும் போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அவர்களில் சிலர் சாலையில் படுத்து புரண்டு போராட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மதுரை புறநகர் பகுதியில் 11 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 874 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோல் நகர் பகுதியில் 3 இடங்களில் நடந்த போராட்டங்களில் 650 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 1,524 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story