3 கட்டமாக வைகை அணையை தூர்வாரும் பணி


3 கட்டமாக வைகை அணையை தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 29 Sept 2021 2:22 AM IST (Updated: 29 Sept 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

3 கட்டமாக வைகை அணையை தூர்வாரும் பணி-மதுரை ஐகோர்ட்டில் பொதுப்பணித்துறை தகவல்

மதுரை
மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், வைகை பாசனத்தை நம்பித்தான் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாயமும், குடிநீர் தேவையும் உள்ளன. அணைக்கு நீர்வரத்து பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. பல இடங்களில் மோட்டார்கள் மூலம் தண்ணீர் திருடப்படுகிறது.
நகர்பகுதிகளில் அதிகளவு கழிவுநீர் கலப்பதால் வைகை நீர் மாசடைகிறது. எனவே, வைகை அணையை முழுமையாக தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தண்ணீர் திருட்டை தடுக்க முழுமையாக கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி துரைசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அணையை தூர்வாருவது குறித்து ஒரு நிறுவனம் ஆய்வு செய்தது. 
ரூ.197.83 கோடி மதிப்பீட்டில் 3 கட்டமாக தூர்வாரும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
நீர்வரத்து பகுதியில் அளவீடு செய்து 1,090 எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன. வைகை, மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளை தூர்வாரி பழைய நிலைக்கு கொண்டு வருவது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story