இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை; சாலைகள் வெள்ளக்காடாக மாறின


இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை;  சாலைகள் வெள்ளக்காடாக மாறின
x
தினத்தந்தி 29 Sept 2021 9:30 PM IST (Updated: 29 Sept 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் இடி-மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்ததால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

ஈரோட்டில் இடி-மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்ததால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
மழை கொட்டியது
ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் சிரமப்பட்டார்கள். நேற்றும் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை 5 மணிஅளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. அப்போது இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
சுமார் 2 மணிநேரம் மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் அடை மழை கொட்டி தீர்த்தது. சிறிது தூரத்தில் வருபவர்கள் கூட தெரியாத வகையில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வீதியில் நடந்து சென்ற பொதுமக்களும் ஆங்காங்கே ஒதுங்கினார்கள். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் தவித்தார்கள்.
வெள்ளக்காடாக மாறியது
ஈரோடு பஸ் நிலையம், சூரம்பட்டி, ரெயில் நிலையம், கள்ளுக்கடைமேடு, நாடார் மேடு, கொல்லம்பாளையம், மரப்பாலம், கருங்கல்பாளையம், அசோகபுரம், வீரப்பன்சத்திரம், சூளை, பெரியவலசு, பழையபாளையம், திண்டல் என மாநகர் பகுதி முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின.
ஆர்.கே.வி.ரோடு, கொங்கலம்மன் கோவில் வீதி, சத்திரோடு, பவானிரோடு, பெருந்துறைரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள், கார்களில் தண்ணீர் புகுந்ததால் ஸ்டார்ட் ஆகாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டார்கள்.
போக்குவரத்து ஸ்தம்பித்தது
கருங்கல்பாளையம் காவிரிரோடு பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. மேலும், சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. அங்கு மழை காரணமாக சேறும், சகதியுமாக மாறியது. முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மாநகர் பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
நேதாஜிரோடு, ஆர்.கே.வி.ரோடு பகுதிகளில் சுமார் 4 மணிநேரத்துக்கு எந்த வாகனங்களும் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து முடங்கியது. பன்னீர்செல்வம் பூங்கா, காளைமாட்டு சிலை, சூரம்பட்டி நால்ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, சத்திரோடு, பவானிரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. மேலும், பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கருங்கல்பாளையம் கந்தசாமி வீதியில் 8 வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
இதேபோல் முனிசிபல்காலனி, இந்திராநகர், மோசிக்கீரனார் வீதி, மரப்பாலம், சூரம்பட்டி அணைக்கட்டு உள்பட பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பாத்திரங்களில் வாரியிரைத்து பொதுமக்கள் தண்ணீரை வெளியேற்றினார்கள். வீடுகளில் கைக்குழந்தைகளுடன் வசிப்போர் பெரும் அவதி அடைந்தார்கள்.
மின்சாரம் தடை
ஈரோட்டில் திடீரென பலத்த மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மின்சார வினியோகம் தடைபட்டது. மழை பெய்வதற்கு முன்பு அடித்த காற்றில் ஈரோடு பஸ் நிலையம் அருகில் மேட்டூர்ரோட்டில் உள்ள ஒரு செல்போன் கடையின் விளம்பர பலகையில் தீப்பற்றியது. 
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் மழை பெய்து தீ அணைந்தது.
1 More update

Related Tags :
Next Story