சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை கணக்கில் வராத ரூ.66 ஆயிரம் பறிமுதல்


சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை கணக்கில் வராத ரூ.66 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Sep 2021 8:52 PM GMT (Updated: 30 Sep 2021 8:52 PM GMT)

சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.66 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்
கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம்
சேலம் உடையாப்பட்டி பகுதியில் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஓட்டுனர் உரிமம், புதிய வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்குதல், பழைய வாகனங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் நரேந்திரன், ரவிக்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 6 மணிக்கு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றனர்.
தொடர்ந்து அனைவரும் அதிரடியாக ஒரே நேரத்தில் அலுவலகத்திற்குள் புகுந்து உள்புறமாக கதவை பூட்டினர். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி உள்பட அலுவலர்கள் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல தயாராக இருந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு வந்ததை கண்ட அவர்கள் திடுக்கிட்டனர்.
தீவிர சோதனை
அதன்பிறகு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரியிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரது அறையில் உள்ள பீரோ, மேஜை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சோதனை நடத்தினர். பின்னர் அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தினர். 
அப்போது அலுவலகத்திற்குள் புரோக்கர் சிலர் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடமும் விசாரித்தனர். மேலும் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
ரூ.66 ஆயிரம் பறிமுதல்
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும் போது, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் நேரடியாகவும், புரோக்கர்கள் மூலமும் லஞ்சம் பெற்றுக்கொண்டு சான்றிதழ் வழங்குவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் இன்று (நேற்று) மாலை 6 மணிக்கு சோதனையை தொடங்கினோம். இரவு 10 மணி வரை தொடர்ந்து 4 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.66 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளோம் என்றனர். 
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையால் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story