நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய நரிக்குறவர்களுக்கு வாய்ப்பு கலெக்டர் தகவல்


நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய நரிக்குறவர்களுக்கு வாய்ப்பு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 Sep 2021 9:09 PM GMT (Updated: 30 Sep 2021 9:09 PM GMT)

நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய நரிக்குறவர்களுக்கு வாய்ப்பு

சேலம்
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டு 18 வயது முதல் 60 வயதுக்குள் உள்ள நரிக்குறவர் இன மக்கள் தமிழக அரசின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ்செயல்பட்டு வரும் நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவுசெய்து கொள்ளலாம்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.500-ம், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000-ம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதேபோல், 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படிப்புக்கு ரூ.1,000-ம், 12-ம் வகுப்பு மற்றும் பட்டபடிப்பிற்கு ரூ.1,500-ம், பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பட்டப்படிப்பிற்கு ரூ.4 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மேலும் விபத்தில் மரணம் ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகையும், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும், இயற்கை மரணம் அடைந்தால் ரூ.20 ஆயிரம் மற்றும் ஈமச்சடங்கு செலவினம் ரூ.5 ஆயிரம் சேர்த்து ரூ.25 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படுகின்றன. எனவே, இதுபோன்ற உதவிகளை பெறுவதற்கும், நலவாரியத்தின் உறுப்பினராக இதுவரை பதிவு செய்யப்படாமல் உள்ளவர்கள் புதிய நலவாரிய உறுப்பினர் அட்டை பெறுவதற்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், தொலைபேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (அறை எண்-110) ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story