179 பேருக்கு ரூ.2½ கோடி கடன் உதவி; அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்


179 பேருக்கு ரூ.2½ கோடி கடன் உதவி; அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 30 Sep 2021 9:54 PM GMT (Updated: 30 Sep 2021 9:54 PM GMT)

179 பேருக்கு ரூ.2½ கோடி கடன் உதவியை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு
179 பேருக்கு ரூ.2½ கோடி கடன் உதவியை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
பயிர்க்கடன்
கூட்டுறவுத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியன சார்பில் கடன் உதவி வழங்கும் விழா ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். விழாவில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கடன் உதவியை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு இணைக்கப்பட்ட 230 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள், மத்திய காலக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பயிர்க்கடன் நபருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரையும், நிலம், நகை அடமான கடனாக ரூ.3 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. அதன்படி 2020-2021 ஆண்டில் ரூ.1,000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சுமார் 87 ஆயிரத்து 866 விவசாயிகளுக்கு ரூ.984 கோடியே 49 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது”, என்றார்.
ரூ.2½ கோடி
இந்த விழாவில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் 179 பேருக்கு ரூ.2 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 980 கடன் உதவியும், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கோபியில் தனியார் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த சந்திரசேகரனின் வாரிசுதாரர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 7 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பெரும்பள்ளம் ஓடை ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுகுடியமர்வு செய்ய குடியிருப்பு தற்காலிக ஒதுக்கீடு ஆணைகளும் வழங்கப்பட்டன.
விழாவில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் குறிஞ்சி என்.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், சி.சரஸ்வதி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மேலாண்மை இயக்குனர் செந்தமிழ் செல்வி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகா, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மின்வாரிய தலைமை பொறியாளர் முரளிதரன், மேற்பார்வை பொறியாளர்கள் இந்திராணி, நேரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story