பள்ளிக்கூடங்கள் மீது அக்கறை காட்டாத மாநகராட்சி அதிகாரிகள் முதல்-அமைச்சருக்கு சமூக ஆர்வலர் புகார்


பள்ளிக்கூடங்கள் மீது அக்கறை காட்டாத மாநகராட்சி அதிகாரிகள் முதல்-அமைச்சருக்கு சமூக ஆர்வலர் புகார்
x
தினத்தந்தி 1 Oct 2021 4:04 PM GMT (Updated: 1 Oct 2021 4:04 PM GMT)

ஈரோடு மாநகராட்சியில் உள்ள பள்ளிக்கூடங்கள் மீது அக்கறை காட்டாத அதிகாரிகள் பள்ளிக்கூட வளாகத்தை கழிவுகள் கொட்டும் இடமாக மாற்றி வருவதாக சமூக ஆர்வலர் ஒருவர் தமிழக முதல்-அமைச்சருக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள பள்ளிக்கூடங்கள் மீது அக்கறை காட்டாத அதிகாரிகள் பள்ளிக்கூட வளாகத்தை கழிவுகள் கொட்டும் இடமாக மாற்றி வருவதாக சமூக ஆர்வலர் ஒருவர் தமிழக முதல்-அமைச்சருக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.
பள்ளிக்கூட வளாகத்தில் கழிவுகள்
ஈரோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் வக்கீல் பி.டி.லோகநாதன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள புகார் கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்களின் தரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு தொடர் அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறது. பள்ளிக்கூடங்கள் சீரமைக்கப்படும். நவீனமாக மாற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறி வருகிறார்கள். ஆனால், ஈரோடு மாநகராட்சியில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் அவலநிலையில் உள்ளன. குறிப்பாக ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியை முற்றிலும் அழிக்கும் நோக்கத்தில் அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். ஈரோடு காய்கறி சந்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாக கட்டப்பட உள்ளது. இங்கு தோண்டி எடுக்கப்படும் கட்டுமான கழிவுகள் அனைத்தும் காமராஜர் பள்ளிக்கூட மைதானத்தில் குவியல் குவியலாக கொட்டி வைக்கப்பட்டு உள்ளன.
சுகாதாரம்
பள்ளிக்கூடத்தின் மைதானம் என்ற அக்கறை இல்லாமல் பள்ளிக்கூடத்தையே குப்பை கூடமாக மாற்றும் அதிகாரிகளின் போக்கு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கூடத்தை சுற்றி இருந்த மதில் சுவர் இடிந்து விட்டது. மாணவர்கள் பள்ளிக்கூட வளாகத்தில் பாதுகாப்பாக நடந்து செல்ல வழி இல்லாமல் சாக்கடை பாய்ந்து செல்கிறது.
மழை பெய்தால் பாதுகாப்பாக உள்ளே செல்ல முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளனர். பள்ளிக்கூட வளாகம் இப்படி என்றால், பள்ளிக்கூடத்தின் சுற்றுப்புறம் இன்னும் அவலமாக உள்ளது. சாக்கடை தூர்வாரப்பட்டு அங்கேயே போடப்பட்டு கிடக்கிறது. சுகாதாரம் என்பது பெயர் அளவுக்கு கூட இல்லை.
அடிப்படை வசதிகள்
எனவே தமிழக முதல்-அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் இந்த விஷயத்தில் தலையிட்டு ஈரோடு மாநகராட்சியில் உள்ள அனைத்து அரசு பள்ளிக்கூடங்களையும் உயர் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து மாணவ-மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக செய்துக்கொடுக்க வேண்டும். அரசு பள்ளிக்கூடங்கள் மீதான மக்களின் நன்மதிப்பு பெருக வேண்டும் என்றால் கட்டமைப்பு நன்றாக இருக்க வேண்டும்.
ஆட்சியில் இருப்பவர்கள் நல்ல திட்டங்கள் அறிவித்தாலும், அரசு அதிகாரிகள்தான் அதை அமல்படுத்த வேண்டும். அதன்படி ஈரோடு மாநகராட்சியிலும் அரசு பள்ளிக்கூடங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மாநகராட்சி பள்ளிக்கூடங்கள் மீது அதிகாரிகள் அக்கறை செலுத்தாமல் இருக்கும் நிலை மாற வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறி உள்ளார்.

Next Story